தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது கடலூர், மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாசமலர். இவர்களுடைய மகன் சரவணகுமார் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு சரவணகுமாருக்குச் சுகன்யா என்பவருடன் திருமணம் நடந்து, இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மருமகளைப் பார்ப்பதற்காக வேலாயுதமும் பாசமலரும் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அமெரிக்கா சென்றனர். செல்வதற்கு முன், வீட்டின் சாவியை வேலாயுதத்தின் தம்பி மனைவி பூங்காவனத்திடம் கொடுத்து வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளனர்.கடந்த மே 14-ஆம் தேதி வழக்கம்போல் பூங்காவனம் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுப் பூட்டிச் சென்றுள்ளார். அன்று இரவு 8 மணியளவில் மீண்டும் வந்து பார்த்தபோது முன்பக்க விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது இதனால் சந்தேகம் அடைந்து அருகில் இருந்தவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 103.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அன்றைய கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் வந்து பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.விசாரணையில், இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபர் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், வடலூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பலராமன், உதவி ஆய்வாளர்கள் மகேஷ் மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் பாளையங்கோட்டை சிறைக்குச் சென்று, நீதிமன்ற உத்தரவுப்படி அவரை வழிக்காவலில் வடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மகன் சுடலை கிருஷ்ணன் (எ) முருகன் (39) என்பது தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:கடந்த மே 10-ஆம் தேதி இரவு, நாங்குநேரியைச் சேர்ந்த சுரேஷ் (எ) சூட்டு சுரேஷ், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பேச்சுமுத்து, திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் நான் ஆகிய 4 பேரும் காரில் சென்னைக்குச் சென்று ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம். ஆனால் சென்னையில் இரண்டு நாட்கள் தங்கியும் ஹவாலா பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பாண்டிச்சேரி வழியாக மே 14-ஆம் தேதி மாலை வடலூர் வந்தடைந்தோம். வடலூரில் ஆள் இல்லாத பெரிய வீடுகளைத் தெருத் தெருவாக நோட்டமிட்டோம். அன்று இரவு 7 மணியளவில் வள்ளலார் சபை எதிரே இருந்த ஒரு இருமாடி வீடு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்தோம். காரை வீட்டின் பின்புறமிருந்த இருட்டான பகுதியில் நிறுத்திவிட்டு, நானும் கார்த்திக்கும் காரிலேயே அமர்ந்து நோட்டமிட்டோம். சூட்டு சுரேஷும் பேச்சுமுத்தும் கிரில் கேட் மற்றும் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 103.5 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணத்தைத் திருடி வந்தனர்.பின்னர் நேராகத் திருச்சி துறையூரிலுள்ள சத்தியமூர்த்தி என்பவரிடம் சில நகைகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் பெற்றோம். அதில் எனக்குச் சில தொகையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். சுடலை கிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் கடந்த 3-ஆம் தேதி திருச்சி துறையூர் சென்று சத்தியமூர்த்தியைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.துறையூர் விசுவாம்பாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (எ) சத்யா (37). டிப்ளமோ பட்டதாரியான இவர், பெட்டவாய்த்தலை கடைவீதியில் மாலை நேரங்களில் டிபன் கடை நடத்தி வருகிறார். இதற்கு முன் கோவையில் காய்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டபோது, வடலூர் மற்றும் பண்ருட்டி பகுதிகளுக்குச் சென்று வந்ததால் அப்பகுதிகள் இவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்தன.சென்னை பாரிமுனையில் ஹவாலா பணத்தைக் கொள்ளையடித்தால் காவல்துறைக்குப் பயந்து யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்று தன்னிடம் ஒருவர் கூறிய தகவலை, காய்கறி குடோனில் வேலை செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தைக்கா என்பவரிடம் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். தைகா மூலமாக, கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய சூட்டு சுரேஷின் தொடர்பு இவருக்குக் கிடைத்துள்ளது.ஏற்கெனவே தாம்பரம் பீர்க்கன்கரணை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹவாலா பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டுச் சிறை சென்று வந்துள்ளார். அதன்பின்னர், பழைய நகைகளை வாங்கி உருக்கி விற்று வந்துள்ளார்.மே 15-ஆம் தேதி சூட்டு சுரேஷ் உள்ளிட்ட 4 பேரும் காரில் வந்து, வடலூரில் திருடிய நகைகளில் சுமார் 18 பவுன் நகைகளைக் கொடுத்துப் பணம் கேட்டுள்ளனர். சத்தியமூர்த்தி தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ரூ.15 லட்சத்தைச் சுரேஷிடம் கொடுத்துவிட்டு 18 பவுன் நகைகளைப் பெற்றுக்கொண்டார். அந்த நகைகளை உருக்கி 4 தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயன்றபோது, அவை திருட்டு நகைகள் என்பதால் வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கேட்டுள்ளனர். இதனால் விற்க முடியாமல் திரும்பக் கொண்டுவந்துள்ளார்.இந்நிலையில் சுடலை கிருஷ்ணனைக் காவல்துறையினர் பிடித்ததை அறிந்து பயந்திருந்த சத்தியமூர்த்தியை, அவர் டிபன் கடையில் இருந்தபோது வடலூர் காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இது குறித்து வேலாயுதம் மகள் சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில், வடலூர் போலீசார் சுடலை கிருஷ்ணன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சத்தியமூர்த்தியிடமிருந்து 18 பவுன் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.மேலும் சுடலை கிருஷ்ணன் மீது கொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளும் சத்தியமூர்த்தி மீது 2 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Post navigation கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை ஆபாசமாக பேசிய திமுக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்துகரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி பி மதியழகன் தலைமையில்தமிழக வெற்றிக் கழகம் கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.இப்போராட்டத்தில் கரூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் கழக, வார்டு,பகுதி,கிளை, அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.