sep

“சோழர்களின் பெருமை மீண்டும் தமிழ்நாட்டில்,

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது,

நமது சோழப் பேரரசின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமது தாயகத்திற்குத் திரும்பியுள்ளன.

1976 முதல் 2013 வரை வெளிநாடுகளில் இருந்து வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. ஆனால், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 228-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மற்றும் நமது பழங்காலப் பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுப் பத்திரமாகத் தாய்மண்ணிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வரலாற்றுச் சாதனையின் உச்சமாக, பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தச் செப்பேடுகள் முறைப்படி நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நமது தொன்மையை மீட்டெடுப்பதில் இந்திய அரசு காட்டும் ஈடுபாட்டிற்கு இதுவே மிகப்பெரிய சான்று.

இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு எப்படிச் சென்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு வலிமிகுந்த வரலாறு. நமது நிலத்தின் சில பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில், இந்த விலைமதிப்பற்ற செப்பேடுகள் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனாலேயே இது லைடன் செப்பேடுகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் செப்பேடுகள் வெறும் உலோகத் தகடுகள் அல்ல; தமிழர்களின் ஈடு இணையற்ற கலைத்திறன், அறிவியல் அறிவு, துல்லியமான நில அளவை முறைகள் மற்றும் செம்மையான ஆட்சி நிர்வாகத்தின் உயிரோட்டமான ஆவணம்.

இதில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு வரலாற்று உண்மை உள்ளது. மாமன்னர்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தீவிரமான சிவபக்தர்கள். சைவம் தழைக்கப் பல பிரம்மாண்டமான சிவாலயங்களை எழுப்பியவர்கள். அன்றைய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் (இன்றைய இந்தோனேசியா) மன்னர் மாரவிஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை என்ற புத்த விகாரத்தை அமைக்க உதவிகோரினார்.

ஒரு தீவிர சிவபக்தராக இருந்தபோதிலும், பௌத்த மத விகாரைக்கு ஆனைமங்கலம் கிராமத்தை முழுமையாக மானியமாக வழங்கி மாமன்னர் ராஜராஜ சோழன் ஆதரவளித்தார். இது சோழர்களின் அளப்பரிய மத நல்லிணக்கத்தையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்த மானிய விவரங்களை அவரது மகன், மாமன்னர் ராஜேந்திர சோழன் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் செப்பேடுகளாகப் பொறித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இன்று மீண்டும் நம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு நெடிய சட்டப் போராட்டம் உள்ளது. வழக்கறிஞர் பி. ஜெகநாத் 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான ராஜதந்திர நகர்வுகளுமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

பி. ஜெகநாதின் பயணம் இதோடு முடிந்துவிடவில்லை. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சு மிஷனரிகளால் இடிக்கப்பட்ட சூடாமணி விகாரையின் கோபுரத்தை, மீட்கப்பட்ட இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் குறிப்புகளைக் கொண்டு அதே நாகப்பட்டினத்தில் மீண்டும் கட்டமைக்க வேண்டும் எனத் தனது அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை அவர் தற்போது துவங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

நமது பண்பாட்டின் ஆணிவேரான இந்தச் செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது, தமிழ் கலாச்சாரத்திற்கும் வரலாற்றுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை. நமது வரலாற்றை மீட்டெடுக்கும் பிரதமர் மோடிக்கும், இந்தப் பணிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது பெருமைமிக்க வரலாற்றை மீட்டெடுப்போம்! வருங்கால சந்ததிக்குச் சோழர்களின் புகழைக் கொண்டு சேர்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *