கிழிந்தது திமுகவின் போலி சமூகநீதி முகமூடி; வழக்கறிஞர் கே.பாலு!!!
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மழுப்பலான பதில், பேரவையில் நடுநிலை நாயகராக இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, திமுக உறுப்பினர் போல பதில் அளித்து பேசியது ஆகியவற்றை பார்க்கும்போது திமுகவின் போலி சமூகநீதி முகமூடி கிழிந்தது தெளிவாக தெரிகிறது திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறார். பிகாரில் ஏற்கெனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவெ எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிடுவோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. ஆனால், சமூகநீதியின் தொட்டில், சமூகநீதியின் பிறப்பிடம் என பெயர் பெற்ற தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது சமூகநீதிக்கு திமுக அரசு துரோகம் செய்வதாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சமூகநீதியை காப்பதற்காகவே பிறந்தவர்கள் தங்களை காட்டிக் கொள்ளும் திமுக, சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் உரிய விவாதம் நடத்தாமல், மழுப்பலான பதில் அளிப்பதை பார்க்கும்போது திமுகவின் போலி சமூகநீதி நாடகம் அம்பலமாகியுள்ளது.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி கோரி பாமக சட்டப் பேரவைக் குழுத் தலைவர் ஜி.கே.மணி அனுமதி கோரியபோது அதற்கு உரிய பதிலை பெற்றுத்தர வேண்டிய கடமை பேரவைத் தலைவருக்கு உண்டு. ஆனால், பதிலை பெற்றுத்தர வேண்டிய பேரவைத்தலைவர் அப்பாவு, தானே பதில் அளித்ததை பார்க்கும்போது தனது நடுநிலைத் தன்மையை அவர் இழந்துவிட்டார் என்பது தெளிவாகுகிறது. திமுக உறுப்பினராக அவைக்கு தேர்வு செய்யப்பட்டாலும் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றவுடன் அவர் அனைத்துக் கட்சிக்கும் பொதுவானவர் என்பது தான் அவை மரபு. ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, “திட்டம் போட்டு பிரச்னை பண்ண வேண்டும் என்று விவாதம் செய்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ஆளுநர் உரையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே சாதி வாரி கணக்கெடுப்பை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும். மாநில அரசை எடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசு எடுத்தாலும் அதை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு மட்டும் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுக்க முடியும். இது குறித்து மத்திய அரசின் துறைகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு விஷயத்தில் உங்களோடு ஒத்தக்கருத்தை தான் முதல்வர் கொண்டுள்ளார். வேறு ஏதாவது அழுத்தம் இருந்தால் நீங்கள் முடிவு செய்துகொள்ளாம்” என பாமக உறுப்பினர்களை பார்த்து பேரவைத் தலைவர் பதில் அளித்துள்ளார். அவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பதிலை பெற்றுத்தர வேண்டிய பேரவைத் தலைவர், அதை பெற்றுத்தராமல் தானே பதில் அளிப்பது எந்த வகையில் நியாயம் ஆகும். தொடர்ந்து பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ஏற்கெனவை அவையில் எழுப்பப்பட்டது. இது குறித்து பட்ஜெட் உரையில், பேரவையில் பலமுறை பதில் சொல்லப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வேல்முருகன், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பலமுறை தன்னை நேரடியாக சந்தித்தபோது இது குறித்து விளக்கமாக சொல்லியிருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளுக்கு நான் எதிராளி அல்ல. உங்களுக்கு சாதகமாகதான் உள்ளோம். இந்த விளக்கத்துக்குப் பின்னர் பாமகவினர் எந்த முடிவு எடுத்தாலும் பரவாயில்லை” என பதில் அளித்துள்ளார். முதல்வரின் இந்த பதில் முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பை (census)மத்திய அரசு தான் எடுக்க முடியும், சாதி வாரி கணக்கெடுப்பை (survey) மாநில அரசு மட்டுமல்ல உள்ளாட்சி அமைப்புகளே நடத்த அதிகாரம் உள்ளது என்பது தான் உண்மை. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் பிகார் அரசு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அதை வெளியிட்டுள்ளது. இதற்கு பிகார் உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆக, சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசால்தான் எடுக்கமுடியம் என்பது திமுக அரசின் நிலைப்பாடு. அப்படி இருக்கும்போது பேரவையில் உங்கள் கோரிக்கைகளுக்கு நான் எதிராளி அல்ல, உங்களுக்கு சாதகமாக தான் இருக்கிறோம் என்ற முதல்வர் ஸ்டாலினின் பதில் சாதி வாரி கணக்கெடுப்பில் முதல்வரின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டியுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தாமல் முதல்வர் ஸ்டாலின் தட்டிக்கழித்து மத்திய அரசிடம் பந்தை உதைத்துத் தள்ளுவதை பார்க்கும்போது, திமுக அணிந்திருப்பது போலி சமூகநீதி முகமூடி என்பது அம்பலமாகியுள்ளது. திமுகவின் அந்த போலி சமூகநீதி முகமூடி சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார் இதை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல, சமூகநீதிக்கு குரல் கொடுக்க வேண்டிய திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச்சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை சாதி வாரி கணக்கெடுப்புக்கு உரிமைக் குரல் கொடுக்காமல், சட்டப்பேரவையில் மௌனம் சாதித்ததை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் சமூக நீதி என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் போலி தலைவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள்! ஏனென்றால் தமிழகம் சமூக நீதியின் பிறப்பிடம்!