தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு!
ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதனைத்தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலரை வெளியிடுகிறார். இதில் கட்சியின் மாநில-மாவட்ட மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, வருகிற 24-ந்தேதி ஜெயலலிதாவின் நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் வீற்றிருக்கும் கட்சியின் கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும்,தங்களது பகுதிகளில் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேட்டி-சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு நிர்வாகிகள்-தொண்டர்களை கேட்டுக்கொள்கிறோம். கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வருகிற 24-ந்தேதி ஜெயலலிதாவின் உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்திட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.