மாணவர்கள் இடையே திடீர் மோதல்; வைரலாகும் மோதல் வீடியோ!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்துவது தொடர்பான பல்கலைக்கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., இடதுசாரிகள் ஆதரவு மாணவர் அணியான இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில், நடப்பாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலுக்கான தேர்தல் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது ஏ.பி.வி.பி., மற்றும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) இடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதில் ஜே.என்.யூ.சங்க மாணவர் தலைவர் ஐஷே கோஷ், ஏ.பி.வி.பி. மாணவர்களால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் கூரிய ஆயுதத்தால் தங்கள் அணியை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டதாக ஏ.பி.வி.பி.யும் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். மாணவர் சங்க தேர்தல் தொடர்பான கூட்டத்தில் ஏ.பி.வி.பி. மற்றும் இந்திய மாணவர் சங்கம் உறுப்பினர்களுக்கு இடையே நடந்த மோதல் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.