மஞ்ஞுமெல் பாய்ஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
-பாலமுரளிவர்மன்
மஞ்ஞுமெல் பாய்ஸ்
நல்ல படமாக சாத்தியமானது எவ்வாறு?
மிக முக்கியமாக
இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை.
கதாநாயகி இல்லை்
காதல் இல்லை..
பொருளாதாரமயமாக்கலுக்கு முந்தைய சமூகத்தில்
பாசாங்கு அற்று முழுமையாகப் பரவி இருந்த நட்பு எனும்
உன்னத கூட்டு உணர்வு,
அதனுடைய அசல் தன்மையோடு இளமைத்துள்ளலோடு விரவி கிடக்கிறது.
சுற்றுலா செல்லும் இளைஞர் கூட்டத்தில் எப்போதும் தெறித்துப் பரவும் உற்சாகம்
அருவியிலிருந்து சிதறுகின்ற நீர்த்துளிகள் போல பார்வையாளர்களை அப்படியே நனைத்து தனதாக்கிக் கொள்கிறது.
எனவே பார்வையாளர்களாகிய
நாமும் கொடைக்கானில் பயணிக்கிறோம்.
பாத்திரங்களும் படமாக்கலும்
நம்மையும் அவர்களில்
ஒருவராக நிகழ்விடத்தில் நிறுத்திவிடுவதால்
எதையும் தாண்டிய அந்த உயரிய உணர்வில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம்..
இன்றைய சமூகத்தில்
மிக அரிதாகிவிட்ட நட்பெனும் கூட்டுணர்வின் விஸ்வரூப தரிசனம்
காணக்கிடைக்கிறது..
தமிழில் வெளியான
அறம்
திரைப்படம் பேசிய அரசியலை இந்த திரைப்படம் பேசவில்லை தான்.
ஆனாலும் படத்தின் மைய இழையாக 900 அடி ஆழத்தில்
அறம் மௌனமாக அழுத்திப் பேசப்படுகிறது.
சரி…
இப்போது இந்த படத்தைக் கொண்டாடுகிற
தமிழ்த் திரைப்படத் துறையினரும்
குறிப்பாக தயாரிப்பாளர்களும் நடிகர்களும்
தமிழில் இத்தகைய படத்தை எடுத்தால் கொண்டாடுவார்களா என்பது கேள்விக்குறிதான்.
முதலில் இத்தன்மையான படத்தை தமிழில் எடுக்க முடியுமா? என்பதே மிகப்பெரிய கேள்விக் குறிதான்.
அதான் அறம் வந்துவிட்டதே என்பார்கள்.
கடந்த வாரம் கூட ஒரு தயாரிப்பாளர் காதல் தேவைப்படாத ஒரு கதையில் காதல் காட்சிகள் வேண்டும்
என்டர்டெய்ன்மெண்ட் வேண்டும் என்று சொன்னார்..
கதாநாயகனின் அம்மா மட்டும் பேசவேண்டிய காட்சியில் கூட
அம்மா பேசும் வரை கதாநாயகன்
அமைதியாக இருக்க வேண்டுமா?என்று கேட்கிற கதாநாயகர்கள் இங்கே இருக்கிறார்கள்.
அப்போதும் கூட தானும் குறுக்கே குறுக்கே பேச வேண்டும் என்று ஆசைப்படுகிற நாயகர்கள்,
எல்லா வெளிச்சமும் தன் மீது மட்டுமே விழவேண்டும் என துடிக்கிற கதாநாயகர்கள்
இயக்குநர்கள்
நிரம்பி இருக்கிற தமிழ்த்திரைத்துறை.
வாழ்க்கையில் நட்பை கொன்றுவிட்டு
நட்பை பற்றி அருமையாக படம் எடுக்கும் பாடம் எடுக்கும் பலர் நிறைந்திருக்கும் தமிழ்த்திரைத்துறை,
தத்துவம்,சித்தாந்தம்,புரட்சி,
வெள்ளைத்தோல் உட்பட
எதுவாயினும்
வெளியிலிருந்து வருவதே உயர்ந்தது என்ற மனப்பான்மையில் கடந்த 700 ஆண்டுகளாக ஊறிவிட்ட தமிழ்ச்சமூகம்
இந்த படத்தை எடுத்த மலையாள படைப்பாளிகளின் கூட்டு உணர்வுத் தன்மையை புரிந்துக்கொண்டால் போதுமானது.
-பாலமுரளிவர்மன்