ஆ.ராசாவை கண்டித்து அவினாசியில் 9-ந் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி அறிவிப்பு!
எம்.ஜி.ஆரை பற்றி தான் வகித்த மந்திரி பதவிக்கும், தற்போது வகிக்கும் எம்.பி. பதவிக்கும் தகுதியற்ற, தரமற்ற ஆ.ராசா பேசியிருக்கிறார். தெய்வ பிறவி எம்.ஜி.ஆர். பற்றி ஆ.ராசா உணராததில் ஆச்சரியம் இல்லை. இன்றைக்கு பதவி சுகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் கட்சி, 1967-ல் ஆட்சி பீடம் ஏறுவதற்கு எம்.ஜி.ஆர். செய்த தியாகம்தான் காரணம் என்பதை இவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அன்றைக்கு அவர் 4 வயதில் அரைக்கால் சட்டை கூட இல்லாமல் அலைந்திருப்பார். அவர், தலைவராக ஏற்றுக்கொண்ட கருணாநிதியும், அவரது குடும்பமும் கடன் தொல்லையால் தவித்தபோது, அவரது மருமகன் முரசொலி மாறன் பெயரில் தயாரிக்கப்பட்ட ‘எங்கள் தங்கம்’ என்ற திரைப்படத்தில் இலவசமாக நடித்து கொடுத்து, அந்த குடும்பத்தையே வாழவைத்த தெய்வங்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்பது அவருக்கு தெரிந்திருக்காது. இந்த உண்மையை படத்தின் 100-வது நாள் விழாவில் கருணாநிதியும், முரசொலி மாறனும் பேசியதாக அன்றைய முரசொலியில் வெளிவந்ததை இவர் படித்திருக்கமாட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அவரது வயது 4. எனவே, எம்.ஜி.ஆரின் அருமை, பெருமைகளை அறிய வாய்ப்பில்லை. தி.மு.க. 1967-லும், தொடர்ந்து 1971-லும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு எம்.ஜி.ஆர். எப்படி சுற்றி சுழன்று பணியாற்றினார் என்பது இவருக்கு துளியளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், “என்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர்.” என்று சொன்னபோது, ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்? என்று கேட்டு தெரிந்திருந்தால், ஆ.ராசா, புத்தி பேதலித்து போய் உளறியிருக்கமாட்டார். தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்க மனமில்லாமல் திமிரோடு நடக்கும் ஆ.ராசாவை கண்டித்து, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவினாசியில் அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும், எம்.ஜி.ஆரின் பக்தர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.