காதல் மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து; கணவர் வெறிச்செயல்!
பெங்களூரு சுங்கதகட்டே பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 32). இவரது மனைவி திவ்யஸ்ரீ (வயது 26). காதலித்து வந்த 2 பேரும் கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தனியாக வசித்து வந்தனர். ஜெயபிரகாஷ் சரியாக வேலைக்கு செல்வதில்லை என தெரிகிறது. இதனால் திவ்யஸ்ரீ தான் வேலைக்கு சென்று வந்தார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் ஜெயபிரகாஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயபிரகாசின் தங்கையின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் கலந்துகொள்ள ஜெயபிரகாசுக்கும், அவரது மனைவி திவ்யஸ்ரீக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், திருமண நிச்சயதார்த்தத்தில் திவ்யஸ்ரீ கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் மீது ஜெயபிரகாசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து திவ்யஸ்ரீயை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.