வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தாமதிக்கும் தமிழக அரசுக்கு பாமக கண்டனம்!
மாநில, தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என சென்னையில் நடந்த பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சிறப்பு பொதுக்குழுநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே.மணி தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில், மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது என்ற அரசியல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தாமதிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தின் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.