அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா; மாணவர்களின் திறனை வெளி கொண்டு வர பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். அதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள், பெற்றோர் முன்னிலையில் வெளிகாட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்காக சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் அறிவித்தார்.அந்த வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகிற 10-ந்தேதிக்குள் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி கொண்டாடிட பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, 2,000-க்கும் மேல் மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட 50 பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், 1,001 முதல் 2 ஆயிரம் வரையிலான மாணவர்கள் எண்ணிக்கையுடன் 350 பள்ளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், 501 முதல் 1,000 வரையிலான மாணவர்களை கொண்ட 1,438 பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரமும், 251 முதல் 500 வரையிலான மாணவர்கள் எண்ணிக்கையுடைய 2,457 பள்ளிகளுக்கு தலா 8 ஆயிரமும், 101 முதல் 250 வரையிலான மாணவர்களை கொண்ட 7,979 பள்ளிகளுக்கு தலா 4 ஆயிரமும், 100-க்கு கீழ் எண்ணிக்கையுடைய மாணவர்களை கொண்ட 25,302 பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500-ம் என மொத்தம் 37 ஆயிரத்து 576 பள்ளிகளுக்கு ரூ.14 கோடியே 93 லட்சத்து 97 ஆயிரத்தை ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.