காவல்துறையின் மிரட்டலை மீறி கடலூரில் பெருவெளி காப்பு பட்டினி போராட்டம்..!
தமிழ்நாடு அரசு வள்ளலார் சர்வதேச மையத்தை வடலூர் ஞானசபை பெருவெளியில் அமைக்க கூடாது. மாறாக வேறொரு இடத்தில் அமைக்க வேண்டும் என கோரி உத்திரஞான சிதம்பரம் சேவை இயக்கம் ஒருங்கிணைத்த கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டம் கடலூர் மஞ்சகுப்பம் சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. போராட்டம் அறிவித்த நாள் முதல் காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டே இருந்தனர். மஞ்சக்குப்பம் அஞ்சல் நிலையம் அருகில் நடைப்பெறுவதாக இருந்த அறவழி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதை தொடர்ந்து இடத்தை மாற்றி கடலூர் சன்மார்க்க சங்க வாசலில் உண்ணாநிலை போராட்டம் பந்தலை அமைத்தனர். அதற்கும் காவல் துறை அனுமதிக்க வில்லை. அங்கு போடப்பட்ட பந்தலை பிரித்து போட்டனர். மேலும் அங்கே வைக்கப்பட்ட போராட்ட பாதாகைகளை அனைத்தையும் கிழித்து ஏறிந்தனர். இதை கேட்ட சன்மார்க்க அன்பர்களை ஒருமையில் பேசி இழிவு செய்தனர் காவல்துறை. இதை தொடர்ந்து கடலூர் சன்மார்க்க சங்க கட்டிடத்தில் உள்ளேயே அன்பர்கள் அனைவரும் அமர்ந்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போதும் காவல்துறையினர் “எல்லோரும் கலைந்து செல்லுங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மிரட்டினர். நாங்கள் கலைந்து போகமாட்டோம் இது எங்கள் சபைக்குள் நடக்கிறது. இதற்கு உங்கள் அனுமதி தேவையில்லை என்று சொல்லி சன்மார்க்க சங்க கட்டிடத்திற்குள்ளேயே உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்தனர். கடலூர் சன்மார்க்க சங்கத்திலிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நடவடிக்கை இல்லை என்றால் அடுத்தக்கட்டம் நீதிமன்றத்தில் வழக்கும் தடை ஆணையும் போடவும் முடிவு எடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். வள்ளலார் பணியகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர்ராஜ் , இராசமாணிக்கம், முருகன்குடி முருகன், பொறியாளர் பன்னீர் செல்வம், ராணிப்பேட்டை தணிகேசன், விழுப்புரம் சன்மார்க்க செயற்பாட்டாளர் தமிழ்வேங்கை, உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சேவை இயக்கத்தின் தலைவர் இராமகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், நிர்வாகிகள் சிவநேசன், சீனிவாசன், வள்ளலார் பணியகத்தின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்வே. சுப்ரமணியசிவா ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். நல்லூர் சண்முகம், கனகசபை, சக்திவேல் உள்ளிட்ட வள்ளலார் பணியக்கத்தின் அன்பர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் தன்னெழுச்சியாக பல்வேறு மாவடடங்களிலிருந்தும் அன்பர்கள், சன்மார்க்க அறிஞர்கள், சாதுக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். காவல்துறையின் நெருக்கடிகளுக்கிடையே எழுச்சியாக நடைபெற்றது உண்ணா நிலை போராட்டம். பெருவெளியை காக்கும் வரை நம் அறவழி பயணம் தொடரும் என சன்மார்க்க அன்பர்கள் தெரிவித்தனர்.