“ஜிப்மர் பெண் டாக்டருக்கு வந்த ஆபாச மெயில்” விசாரணை நடத்த கவர்னர் உத்தரவு!
புதுச்சேரி ஜிப்மரில் உள்ளிருப்பு பெண் டாக்டர் ஒருவரின் இ-மெயில் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயிற்சி வகுப்பு முடிந்த உடன் தனது அறையில் தனிமையாக சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிற்சி டாக்டராக படிப்பை முடிக்க முடியாது. தேர்ச்சி பெற்றுள்ள எம்.டி. முதலாம் ஆண்டு படிப்பிலும் சேர முடியாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த இ-மெயிலை பார்த்து அதிர்ச்சிடைந்த பெண் டாக்டர், இது குறித்து ஜிப்மர் நிர்வாகம், ஜிப்மரில் உள்ள பெண்கள் வன்கொடுமை பிரிவு, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி விசாரித்தபோது, இதேபோல மேலும் பல மருத்துவ மாணவிகளுக்கும் இ-மெயில் வந்திருந்தது தெரியவந்தது. இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பெண் டாக்டர் புகார் அளித்தார். இதுபற்றி விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆபாச இ-மெயில் விவகாரம் குறித்து ஜிப்மர் வன்கொடுமை பிரிவு நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.