அ.தி.மு.க. காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது தெரியுமா?-அமைச்சர் சிவசங்கர்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை மாலை நடைபெற உள்ள நிலையில்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்  சா.சி.சிவசங்கர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அனைத்து அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சி, தமது காலத்தில் பதினான்காவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல், தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்தது. எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியமாக, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு “பே மேட்ரிஸ்” தனித்தனி ஊதிய விகிதம், 2.57 காரணி முதல்வர்  வழங்கப்பட்டு வருகிறது. ஊதியமும் 5 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இது அத்தனையும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் தொழிலாளர்களுக்கு கிடைத்தவை. கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ.2000 கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூ.1500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசாணை 36-ஐ பிறப்பித்து போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் நம் முதல்வர் அவர்கள். புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து, இத்துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

தீபாவளி போனஸ் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவிகிதமாக உயர்த்தி ரூ.16,800/- வழங்கியவர் நம்முடைய முதல்வர் தான். இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே. தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர்தான் நம் முதல்வர். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது. இப்போது சென்னையில் வரலாறு காணாத அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய நம் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம். இந்த இயற்கை பேரிடருக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வராத நிலையில், முதல்வர் நிவாரண தொகுப்பை அறிவித்து வழங்கி வருகிறார்கள். முழு அரசு இயந்திரமும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

பேரிடர் நேரத்தில் உடனடியாக களம் இறங்கி பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் நம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் முதல்வருக்கும். பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன்.

எனவே, பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை கருத்தில் கொண்டு போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

எங்கள் WhatsApp குழுவில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial