உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; தொகுதி வாரியாக கூட்டம்!
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. அரசின் 10 ஆண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாக கேட்டறிந்திட தி.மு.க.வினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க.வை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர். வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டு காலத்தில் மத்திய பா.ஜனதா அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அ.தி.மு.க.வின் துரோகங்ளகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். அந்த வகையில் தி.மு.க. தலைவர் குரலாக வருகிற 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் இந்த தேர்தல் பிரசார கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.