பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை இடம் பெறாது! அமைச்சர் சேகர்பாவுவின் கூற்று அம்பலப்படுத்துகிறது தமிழ் குடமுழுக்கு கோரி உண்ணாப் பேராட்டம்!

தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்
கி. வெங்கட்ராமன் அறிவிப்பு !

பழநி முருகன் கோயில் திருக்குட முழுக்கில் தமிழே இடம்பெறாது என்பதுதான் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் நேர்காணாலில் இருந்து தெரிகிறது. பழநி முருகன் கோயில் திருக்குட முழுக்கு வரும் 2023, சனவரி 27 அன்று நடைபெற உள்ளது.

இத்திருக்குட முழுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்று கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. குமரகுருபரன் அவா்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அவர்கள் தலைமையில், பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் 21.12.2022 அன்று நேரில் சந்தித்து மனு அளித்தோம்.

மனுவைப் பெற்றுக் கொண்டு பதிலளித்த ஆணையர் குமரகுரு, கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் கூறியவாறு ஒரு குழு அமைத்திருப்பதாகவும், அக் குழுவின் பரிந்துரை பெற்ற பிறகு அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். அத்துடன், ஆணையர் அநாகரிகமாக நடந்து கொண்டு எங்களை வெளியே போங்கள் என்றார்.

புதிதாகக் குழு போட்டு, தமிழ் அர்ச்சனையை அனுமதிப்பதா இல்லையா என்று ஆய்வு செய்வது, மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணான நிலைப்பாடு ஆகும்!

அப்போதே, பழநி முருகன் கோயில் திருக்குடமுழுக்கில் தமிழ் இடம்பெறாதோ என்ற ஐயம் எழுந்தது. அமைச்சர் திரு. P.K. சேகர்பாபுவின் கூற்று இந்த ஐயத்தை உறுதி செய்வதாக இருக்கிறது.

கடந்த 26.12.2022 அன்று பழனியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், குடமுழுக்கு பணிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “ஆகம விதிகள் நமக்கு நாமே வகுத்துக் கொண்டவை. நல்ல பணிகள் நடைபெறும்போது அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல், மூத்த அர்ச்சகர்களுடன் கலந்தாலோசித்தே பழநி கோயில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறுகின்றன. ஆகம விதிகளின்படியே அவை நடைபெறும். ஆகமங்களுக்கு மாறாக ஒரு பணி கூட நடைபெறாது” என்றார்.

தமிழில் பழநி கோயில் திருக்குடமுழுக்கு நடைபெறாது என்பதைத்தான் மூடி மறைத்து இவ்வாறு கூறுகிறார்.
ஏனெனில், வடபழநி முருகன் கோயில் குடமுழுக்கிலும் (23.01.2022) அமைச்சர் சேகர்பாபு இவ்வாறுதான் “ஆகமப்படி” என்று பேசி நடந்து கொண்டார்.

வடபழநி குடமுழுக்கு விழாவுக்கு இரண்டு வாரங்கள் முன்பாக நானும் (கி. வெங்கட்ராமன்) தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்களும் அமைச்சர் சேகர்பாபுவை அவரது இல்லத்தில் சந்தித்து 12.01.2022 அன்று மனு கொடுத்தோம். அப்போது வடபழநி கோயில் குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இணையாக தமிழும் சம அளவில் நடைபெறும் என்று உறுதியளித்தார்.

அப்போது கொரோனா முழுமுடக்கம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாததால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் அக்குடமுழுக்கு நடந்தது.

விழா முடிவில் செய்தியாளர்கள் தமிழில் குடமுழுக்கு நடந்ததா எனக் கேட்ட பொழுது, “ஆகம விதிப்படி எல்லாம் நடந்தது” என்றுதான் சேகர்பாபு பூசி மெழுகிப் பதில் சொன்னார்.

இப்போது, பழநி முருகன் கோயில் குடமுழுக்கு தொடர்பாகவும் அதே போல்தான் பதிலளிக்கிறார். பழநி முருகன் கோயில் குடமுழுக்கிலும் தமிழ் இடம் பெறாது என்பது உறுதியாகிறது. இது அப்பட்டமான சட்ட மீறலாகும்!

ஏனெனில், மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு (3.12.2021) நடப்பிலுள்ள தமிழ் வழிபாட்டை நிறுத்தி வைக்கவில்லை!

இந்து சமய அறநிலையத் துறையின், 10.09.1997 – நாளிட்ட சுற்றறிக்கை (சுற்றறிக்கை ந.க. எண் 73848/97), அறநிலையத்துறையில் உள்ள கோயில்களில் தமிழ் மந்திர அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இந்த சுற்றறிக்கைக்கு கரூர் கோயில் தீர்ப்போ, வேறு எந்தத் தீர்ப்புமோ தடைவிதிக்கவில்லை.

கரூர் வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் சித்தர் மூங்கிலடியார் பொன்னுசாமி, கரூர் பசுபதீசுவரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கையை முன்வைத்தார். அதனை நீதிபதி கிருபாகரன் அமர்வு ஏற்றுக் கொண்டு தீர்ப்புரைத்தது.

மூங்கிலடியாரின் அடுத்த கோரிக்கை குடமுழுக்கு உள்ளிட்ட வழிபாடுகளில் ஏற்கெனவே நடப்பில் உள்ள அத்தனை மந்திரங்களோடு, அமராவதி ஆற்றங்கரை கருவூரார் திருமந்திரங்களும் இடம்பெற வேண்டும் என்பதாகும்.

அது குறித்துதான் குழு போடும்படி நீதிமன்றம் ஆணையிட்டது. ஏற்கெனவே நடப்பில் உள்ள தமிழ் வழிபாட்டை அது தடைசெய்யவில்லை!

ஆகமங்கள் எதுவும் கருவறைப் பூசையிலோ, வேள்வியிலோ, கலச நீராட்டலிலோ தமிழைத் தடை செய்யவில்லை! எனவேதான், தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தொடங்கி, கரூர் பசுபதீசுவரர் திருக்கோயில், விராலிமலை சுப்பிரமணியர் திருக்கோயில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் தெய்வத் தமிழ்ப் பேரவை முன்முயற்சி எடுத்து, தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது.
சட்ட நிலைமை இவ்வாறிருக்க, ஆகம விதிகளைக் காரணம் காட்டி சமற்கிருத மேலாதிக்கத்தைத் தொடர்வதும், திராவிட மாடலின் தமிழ்மொழி புறக்கணிப்பும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்!

தமிழ்நாடு அரசு இந்த நிலையை மாற்றிக் கொண்டு தமிழ்க் கடவுள் முருகனின் பழநி திருக்கோயில் திருக்குடமுழுக்கில் தமிழும் சம அளவில் இடம்பெற ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 2023 சனவரி 20ஆம் நாள் பழநியில் தெய்வத் தமிழ்ப் பேரவை நடத்த உள்ள அறவழி உண்ணாநிலைப் போராட்டத்தில் அடியார்களும் தமிழன்பர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்!

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial