The Promise -இந்த படம் டோரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் டெர்ரி ஜார்ஜ். படத்தின் கதாநாயகன் ஆஸ்கர் இஸாக். ஓட்டோமான் ஆட்சியின் இறுதி காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் டோரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றது.
ஆக்ஷன் கலந்த காட்சிகளைக் கொண்ட படமாக இருந்தாலும், இது ஒரு மென்மையான காதல் கதையும் கூட. படத்தின் கதை இதுதான்…..
ஓட்டோமான் ஆட்சிக்குட்பட்ட ஒரு ஆர்மேனிய கிராமம் சைரன். அங்கு மருத்துவ பணி செய்து கொண்டிருப்பவன் மைக்கேல் பரம்பரை பரம்பரையாகவே அவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருந்து தயாரித்து, மக்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்து வருகிறார்கள். அதே வழியில் மைக்கேலும் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால், அவனின் இலட்சியம் அதுவல்ல. அதையும் தாண்டி பயணிக்க அவன் நினைக்கிறான்.
கான்ஸ்டான்டினோப்பில் என்ற நகரத்திலிருக்கும் இம்பீரியல் மருத்துவ கல்லூரிக்குச் சென்று அவன் படிக்க ஆசைப்படுகிறான். ஆனால், அதற்கு பணச் செலவு ஆகும். அந்த பணம் அவனிடம் இல்லை. அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு திருமண ஆலோசனை வருகிறது. மாரல் என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்வதாக இருந்தால், அவனுக்கு 400 தங்கக் காசுகளை வரதட்சணை தொகையாக தருவதாக கூறுகிறார்கள். அதற்கு சம்மதித்து, நிச்சயதார்த்தம் செய்து கொண்டாலே, அந்த தொகை கிடைத்து விடும் என்பது தெரிகிறது. அதனால், அதற்கு சம்மதிக்கிறான் மைகேல். இருவருக்குமிடையே நிச்சயம் செய்யப்படுகிறது மைகேல் அந்த வரதட்சணைப் பணத்தை பயன்படுத்தி, மருத்துவக் கல்லூரியில் போய் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் கான்ஸ்டான்டினோப்பிலுக்கு ஆரம்பத்தில் கரடு முரடனாக இடங்களில் குதிரையிலும், பின்னர் கப்பலிலும் பயணமாகிறான்.
கான்ஸ்டான்டினோப்பில் மருத்துவக் கல்லூரியில் அவனுக்கு எம்ரே என்ற நல்ல நண்பனின் நட்பு கிடைக்கிறது மருத்துவக் கல்லூரியில் கற்பதை விட, அவனுக்கு அதிக ஆர்வம் பெண்களின் சரீரத்தின் மீதுதான்.
தன் வசதி படைத்த மாமாவான மெஸ்ரோபின் வீட்டிற்குக் சென்றிருக்கும்போது, அங்கு மைகேல் அனா என்ற அழகான இளம்பெண்ணைச் சந்திக்கிறான், மெஸ்ரோபின் இரு பெண் குழந்தைகளுக்கும் நடனம் கற்றுத் தருபவள் அவள். பாரிஸில் வளர்ந்த ஆர்மேனிய பெண் அவள்.
அனாவிற்கு கிறிஸ் என்றொரு நண்பன் இருக்கிறான், அவன் ஒரு பத்திகையாளர். ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு, தன் நண்பன் கிறிஸ்ஸுடன் வருகிறாள். அனா, அங்கு ஏற்கெனவே இருந்த மைக்கேலை கிறிஸ்ஸுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் அனா.
முதல் உலக போரைத் தொடர்ந்து எல்லா இடங்களிலும் பெரிய அளவில் கலவரம் உண்டாகிறது. பலரும் போருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இளைஞர்களை போரில் சேரும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலை மைகேலுக்கும் உண்டாகிறது. தான் ஒரு மருத்துவ மாணவன் என்று எவ்வளவோ கூறிப் பார்க்கிறான் மைக்கேல். ஆனால், அதிகாரிகள் கேட்பதாக இல்லை. இறுதியில், எம்ரேதான் தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி போர்க்களத்திற்குச் செல்லாமல், மைக்கேலைக் காப்பாற்றுகிறான்.
ஆனால், நகரத்தில் உண்டான கலவரத்தில் சிறிய அளவில் பாதிக்கப்படுகிறான். மைக்கேல். அவனுக்கு உடலில் காயம் உண்டாகிறது. அந்தச் சமயத்தில் அவனுக்கு மிகவும் உதவியாக இருக்கிறாள் அனா. அவனுக்கு அவள் முதலுதவி செய்கிறாள். இருவரும் தனித்து ஒரு இடத்தில் இருக்கும் சூழலில், உணர்ச்சிவசப்பட்டு விடுகிறான் மைக்கேல். அனாவும்தான்…. விளைவு…. இருவருக்குமிடையே உடல் ரீதியாக உறவு உண்டாகி விடுகிறது. இருவராலும் அதை தவிர்க்கவும் முடியவில்லை.
இதற்கிடையில், தன் மாமா மெஸ்ரோப்பை சிறைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறான் மைக்கேல். அது வெற்றிப் பெறவில்லை. ஆனால், அதன் விளைவாக அவன் கைதிகள் இருக்கும் ஒரு முகாமிற்கு அனுப்பப்படுகின்றான்.
கைதிகள் அனைவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதிகாரிகளை ஏமாற்றி விட்டு, முகாமிலிருந்து தப்பிக்கிறான் மைக்கேல். வரும் வழியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரயிலில் அவன் ஏறி, மேற்பகுதியில் படுத்துக் கொள்கிறான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் சொந்த கிராமமான சைரனுக்கு மைக்கேல் வருகிறான். அங்கு துர்க்கியர்கள் ஆர்மேனியர்களுக்கு எதிராக கொடுமையான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டிய நிலை மைக்கேலுக்கு. அப்போது மைக்கேலின் தாய், ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மாரலை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி அவனை வற்புறுத்துகிறாள். கான்ஸ்டான்டினோப்பிலில் தான் காதல் வலையில் விழுந்த அனாவைப் பற்றி கூறுகிறான் மைக்கேல். ‘அது முடிந்து விட்ட கதை இப்போது நடப்பதைப் பார்’ என்கிறாள் தாய். விளைவு-மைக்கேல் மாரலைத் திருமணம் செய்து கொள்கிறான். சில மாதங்களில் மாரல் கர்ப்பமடைகிறாள். அவளை தன் தாயிடம் ஒப்படைத்து விட்டு, வேறொரு ஊருக்குச் சென்ற மைக்கேல் சிறிதும் எதிர்பாராமல் அங்கு தன் காதலி அனாவைச் சந்திக்கிறான். பலரும் இருக்கும் அந்த இடத்தில் கிறிஸ்ஸும் இருக்கிறான். அனாவைத் தனியே அழைக்கும் மைக்கேல் தனக்கு திருமணமாகி விட்ட தகவலை அவளிடம் கூறினான். அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறாள் அனா. தன் குடும்பம் கிராமத்திலிருந்து தப்பிப்பதற்கு அனாவின் உதவியைக் கேட்கிறான் மைக்கேல். தன் கவலையை மறந்து விட்டு, அனாவும் அவனுக்கு உதவ தீர்மானிக்கிறாள்.
ஆனால், தப்பித்துச் செல்லும் அகதிகளில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி, இறந்து விடுகிறார்கள். அவர்களில் மைக்கேலின் மனைவி மாரலும், தந்தையும் கூட இருக்கிறார்கள்.
நாட்கள் கடக்கின்றன, கலவரமும் துப்பாக்கிச் சூடும் தொடர்ந்து நடக்கிறது. துர்க்கியர்கள் ஆர்மேனியர்களின் மீது வெறித்தனமாக வன்முறையை ஏவி விடுகின்றனர். அதன் விளைவாக ஏராளமான மக்கள் தங்களின் இன்னுயிரை இழக்கின்றனர். அவர்களில் மைக்கேலின் தாயும் ஒருத்தி. இடிந்து போகிறான் மைக்கேல்.
தாய், தந்தை, மனைவி ஆகியோரை இழந்து கண்ணீர் விடும் மைக்கேலைப் பார்த்து பரிதாபப்படுகிறாள் அனா, அவனுக்கு அவள் ஆறுதல் கூறுகிறாள். அனாவின் நிலையைப் பார்த்து தன் மனதிற்குள் கவலைப்படுகிறான் மைக்கேல்.
ஆர்மேனியர்களின் மீது துர்க்கியர்கள் நடத்தும் வேட்டை தொடர்கிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடுகின்றனர் மக்கள். இறுதியில் ஏராளமான பேர் படகுகளில் தப்பித்துச் செல்ல முயல்கிறார்கள். அப்போது ஒரு படகு நீரில் தத்தளித்து, கவிழ்ந்து விடுகிறது. படகிலிருந்து நீருக்குள் விழுந்தவர்களில் ஒருத்தி….. அனா. மைக்கேல் நீருக்குள் பாய்ந்து அனாவைக் காப்பாற்ற எவ்வளவோ முயல்கிறான். ஆனால், முடியவில்லை அனா இறந்து விடுகிறாள் மைக்கேலால் காப்பற்ற முடிந்தது தன் மாமா மெஸ்ரோபின் மகளான சிறுமி யேவாவை மட்டும்தான். அனாவை இழந்து, உயிருக்கு உயிராக அவளை நேசித்த மைக்கேலும், கிறிஸ்ஸும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூற யார் இருக்கிறார்கள்?
மைக்கேல் தான் காப்பாற்றிய யேவாவை (அவளின் முழு குடும்பமும் இறந்து விட்டது) தத்தெடுத்து வளர்க்கிறான். வருடங்கள் கடந்தோடுகின்றன. கிறிஸ் மரணமடைகிறான் யேவா வளர்ந்து இளம்பெண் ஆகிறாள். தான் படித்த இடத்தில் அவள் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடைபெறுகிறது. அந்தத் திருமணத்திற்கு இப்போது உயிருடன் இருக்கும் ஆர்மேனியர்கள், தங்களின் குடும்பங்களுடன் வந்து கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். மது விருந்து நடக்கிறது. மதுவைக் கையில் வைத்தவாறு மைக்கேல் இப்போது உயிருடன் இருக்கும் ஆர்மேனியர்களையும், இனி வர இருக்கும் தலைமுறையையும் மனம் நெகிழ வாழ்த்துகிறான். அத்துடன் படம் முடிவடைகிறது.
மனதைக் கொள்ளை கொள்ளும் கவித்துவத் தன்மை நிறைந்த இப்படத்தில் மைக்கேலாகவே வாழ்ந்திருக்கிறார். ஆஸ்கர் இஸாக். அனாவாக மிகவும் அருமையாக நடித்திருப்பவர் சார்லெட் லீ பான். கிறிஸ்ஸாக முத்திரை பதித்திருப்பவர் கிறிஸ்டியன் பேல்.