“ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது: 10-ம் வகுப்பு துணைத்தேர்வு”
.தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவ-மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீண்டும் தேர்வு எழுத அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை மாத துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் ஏப்ரலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூ.125 பணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள். 10-ம் வகுப்பு தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70, மொத்தம் ரூ.195. இதனை சேவை மையத்தில், பள்ளியில் பணமாக செலுத்த வேண்டும்.