வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!
வடலூர் திருவருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு அரசாங்கம் 52 நிகழ்வுகளாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி இறுதியில் வடலூரில் சத்திய ஞான சபையில் உள்ள 70 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச மையம் அமைக்கப் போவதாக அறிவித்தார்கள். அதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தப்பு புள்ளி ஏல அறிவிப்பை (EO/1/2023) 17-11-2023 அன்று வெளியிட்டு 29-12-2023 கடைசி நாளாகும் என்ற அறிவிப்பு வெளியானது. வடலூர் வள்ளலார் திருச்சபையில் சர்வதேச மையம் அமைக்க வேண்டும் என்று எந்த சன்மார்க்க அன்பர்களும், சன்மார்க்க சங்கங்களும் கேட்கவில்லை. ஆனாலும் அரசு தானே முன்வந்து செய்வதை வள்ளலார் பணியகம் சார்பாக நாங்கள் வரவேற்கிறோம். அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம். ஆனால் அந்த சர்வதேச மையம் திருச்சபைக்கு உள்ளே இருக்கிற 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமையக்கூடாது. அது பெருவெளிக்கு வெளியே இருக்கிற வடலூரை சுற்றியுள்ள கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, சேத்தியாதோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும் என்று கூறுகிறோம். இதற்கு வாய்ப்பில்லாத நிலையில் திருச்சபைக்கு நேர் எதிரே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு அது தற்போது அந்த சுரங்கம் மூடப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் சர்வதேச மையத்தை நிறுவலாம். மேலும் சர்வதேச அளவில் இருந்து வரக்கூடிய சன்மார்க்க அன்பர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் வந்து இறங்குவதற்கு ஏதுவாக அங்கு விமான நிலையங்களும் அமைக்கலாம் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் அந்த அந்த இடத்தை ஆய்வு செய்து அதற்கான வேலைகளை துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
சர்வதேச மையம் திருச்சபைக்கு உள்ளே இருக்கிற 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்தால் தொடர்ந்து நான்கு நாள் நடக்கிற தைப்பூச நிகழ்வில் 5 லட்சம் பேர் கூடுவார்கள். அது இன்னும் எதிர்காலத்தில் 10 லட்சம் பேராக கூடும்போது கூட்ட நெரிசல் ஏற்படும்.
வள்ளலார் அவர்கள் எதிர்காலத்தில் இவ்வளவு பேர் கூடுவார்கள் என்று தான் அவர் திருச்சபைக்கு முன்புறம் பெருவெளியை ஏற்படுத்தினார். அதற்காக பார்வதிபுரம் மக்கள் அவருக்கு 80 காணி நிலத்தை தானமாக வழங்கினார்கள். அந்த இடத்தில் சர்வதேச மையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தால் வள்ளலாருடைய நோக்கத்தை சிதைப்பதாகிவிடும்.
வள்ளலார் பணியகத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணிய சிவா மற்றும் பெண்ணாடம் பகுதி பொறுப்பாளர் முருகன்குடி முருகன், சன்மார்க்க அன்பர்களுடன் கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரை சந்தித்து மேற்கண்ட செய்திகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுவை அளித்து விளக்கம் கேட்டோம். அதற்கு அவர் நாங்கள் இந்த 70 ஏக்கர் பெருவெளியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தான் நாங்கள் இந்த கட்டுமான பணிகளை செய்யப் போகிறோம் மற்றபடி மற்ற இடங்களை நாங்கள் எந்த கட்டுமான பணிகளையும் செய்ய மாட்டோம் என்று வாய்மொழியாக பேசினார்.
நாங்கள் கட்டுமான பணிகளுக்கான திட்ட வரைவுகள் வரைபடங்களை கேட்டோம் அதற்கு அவர் மறுத்துவிட்டார். பிறகு நாங்கள் வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து செய்திகளை அறிவித்து விட்டு வந்து விட்டோம். இறுதியாக சர்வதேச மையம் பெருவெளியில் அமையக்கூடாது வேறு இடம் தேர்வு செய்து சர்வதேச மையத்தை அங்கு நிறுவ வேண்டும் என்பது சன்மார்க்க அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.