தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் தி.மு.க.வினருக்கே உரித்தான குணம்;அண்ணாமலை!
கடந்த காலங்களில் கவர்னர் உரையை புறக்கணித்தும், விமர்சித்தும் வெளிநடப்பு செய்த தி.மு.க., ஆட்சிக்கு வந்தபிறகு பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை கவர்னர் கட்டாயமாக வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண். சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் நாட்டிலே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது, அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்கின்றனர். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்துள்ளதாக பெருமைப்படுவதற்கு முன்பு, நம் நாட்டில் மற்ற மாநிலங்களான உத்தரபிரதேசம் ரூ.33 லட்சம் கோடி, குஜராத் ரூ.26 லட்சம் கோடி, கர்நாடகா ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்துள்ளது என்பது தி.மு.க.வுக்கு தெரியுமா? முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்பதை தி.மு.க. உணரவேண்டும். சென்னை மற்றும் தென் தமிழக வெள்ள பாதிப்பை திறம்பட கையாண்ட அரசுக்கு பாராட்டுக்கள் என கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளது. தென் தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்தபோது, இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பங்கேற்க டெல்லி சென்றவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு, தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் தி.மு.க.வினருக்கே உரித்தான குணம். சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று உரையில் தெரிவித்துள்ளனர். 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை, தமிழகத்திற்கு ரூ.27 ஆயிரத்து 959 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையாக கொடுத்தது மட்டுமல்லாது, கொரோனா காலகட்டத்தில் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 ஆயிரத்து 336 கோடி கடன் உதவியும் மத்திய அரசு வழங்கியது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது என்று தெரிவித்துள்ளனர். கோவை தற்கொலை படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னவர்களுக்கு சட்டம்-ஒழுங்கின் மீது எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி பேசிய பிறகு மத நல்லிணக்கத்தை பற்றி பேச தி.மு.க. அரசுக்கு என்ன தகுதி உள்ளது. முதல்வரின் காலை உணவு திட்டம், நாட்டின் முதன்மை மாநிலம் என்கின்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 2020 முதல் 2022-ம் ஆண்டு வரையில், தமிழகத்திற்கு ரூ.1,146 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு தயாரித்த கவர்னர் உரையில், ஒரே ஒரு குறைதான், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தின் சாதனை அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அது இடம் பெறாமல் போனது உள்ளபடியே மிகப்பெரிய ஏமாற்றம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என தெரிவித்துள்ளார்.