விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை வெள்ளம்,பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை வெள்ளம்,பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சென்னை,திருச்சி ரயில்வே வழித்தடத்தில் செம்பளக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், கோபுரபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சுரங்க பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதிலிருந்து உளுந்தூர்பேட்டை மங்கலம்பேட்டை பூவனூர் பவழங்குடி மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொழியும் மழைநீர் அப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் வழியாக ஓடி வந்து செம்பளக்குறிச்சி சுரங்க பாதையில் தேங்கி நிற்கும். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும். இதனால் அப்பகுதி மக்கள் மழைக் காலங்களில் ஒரு தீவுப் பகுதியில் வசிப்பதை போல வசித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை. மின் மோட்டார்கள் வைத்து இதில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றினாலும் மழைக்காலத்தில் அதிகளவு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் இந்த சுரங்கப்பாதை நிரம்பி வழியும். இதிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டுமானால் பத்து நாட்களுக்கு மேலாகும். அதுவரை மேற்கண்ட கிராம மக்கள் தண்டவாளத்தை நடைபாதையாக பயன்படுத்துவார்கள். அப்பகுதி வழியாக அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில்கள் வருவது தெரியாமல் நடந்து செல்லும் மக்கள் சிலர் ரயில் மோதி இறந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையினால் அப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கைடுத்து இந்த சுரங்க பாதை முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனால் அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள், 108, தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் மேற்கண்ட கிராமங்களுக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு மின்மோட்டார் வைத்து சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுகிறது ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எந்த ஒரு மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற முடியாது பத்துக்கு மேற்பட்ட மின்மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றினால் தான் முழு தண்ணீரை வெளியேற்ற முடியும் என்பதால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்த சுரங்கத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகமும் இந்த சுரங்கத்தில் மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுரங்கத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றாவிட்டால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர். இந்நிலையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயக்குமார், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வருவாய் துறையினர் போலீசார் இந்த சுரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அதில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சுரங்கத்திற்கு செல்லாத வகையில் கயிறு கட்டி மா இலை தோரணம் கட்டி யாரும் உள்ளே செல்லாத வண்ணம் நடவடிக்கை எடுத்துள்ளனர் ஆனாலும் இளைஞர்கள் மாணவர்கள் அந்த சுரங்கத்தில் குளிப்பதும், வாகனங்களை கழுவுவதுமாக உள்ளனர். இதனால் நீச்சல் தெரியாதவர்கள் அந்த சுரங்கத்தில் இறங்கும்போது உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதே போல வயலூர் பகுதியில் அமைந்துள்ள விவசாய விலை நிலங்கள் மற்றும் சுடுகாட்டிற்கு செல்லும் வகையில் கடலூர் விருத்தாச்சலம் தண்டவாளத்தை கடக்கும் வகையில் ரயில்வே சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையிலும் மழை வெள்ளநீர் தேங்கி சுரங்கம் முழுவதும் நிரம்பி உள்ளதால் அந்த சுரங்க பாதையை விவசாயிகளும் பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதியில் இறந்த 2 பேரின் உடலை அடக்கம் செய்வதற்கு இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் தண்டவாளத்தை கடந்து அப்பகுதியில் சூழ்ந்திருந்த வெள்ளத்தில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். ஆனால் இந்த நீரை வெளியேற்ற இதுவரை ரயில்வே நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. வயலூர் சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாவிட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.