“கணவரின் அராஜகத்தை கண்டுகொள்ளாததால்” தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்!
பெருநகர சென்னை மாநகராட்சியின் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருடைய கணவர் ஜெகதீசன். தி.மு.க. பிரமுகரான இவர் நான்தான் கவுன்சிலர் என கூறிக்கொண்டு சுற்றி வந்துள்ளார் அவர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.கடந்த ஆண்டு வண்ணாரப்பேட்டையில் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஜெகதீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். எனினும் அவரது அராஜக செயல் அடங்கவில்லை. தனது கணவர் ஜெகதீசனின் அராஜகப் போக்கை கவுன்சிலர் நிரஞ்சனா கண்டுகொள்வது இல்லை என்று தி.மு.க. தலைமைக்கு புகார்கள் சென்றன. ஏற்கனவே தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தங்களுடைய பணிகளில் கணவரை அனுமதிக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுபற்றி மேயர் பிரியாவும் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். இந்த நிலையில் பெண் கவுன்சிலர் நிரஞ்சனா மீது தி.மு.க. தலைமை ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த 51வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.