பெண்களின் முன்னேற்றத்திற்கு கூடுதல் கவனம்; மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு!
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற நிகழ்ச்சி மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சார்பில் கோவை ரத்தினபுரியில் நடைபெற்றது. இதில், மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறு தொழில்களுக்கான கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்களுக்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசுகையில்,
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையம் உள்பட நாட்டின் விமான சேவைகள் விரிவாக்கப்பட்டு தேசத்தின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் இலவச வீடு, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர், மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க அனைவரும் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும். நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை மூலம் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைகிறது என்றார்.