சென்னை | காவலரை கொடூரமாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது: பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை
சென்னை | காவலரை கொடூரமாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது: பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை
சென்னை: காவலரை கொடூரமாகத் தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காவலர் ரங்கநாதன் (39). திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநராக உள்ளார். இவர் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றியபோது காவலர்கள் மதுரை ஆனந்த் (33), சென்னை புதுப்பேட்டை சுந்தரராஜன் (38), திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சேர்ந்த மணிபாபு (30) ஆகியோருடன் நட்புடன் இருந்துள்ளார். இவர்கள் 4 பேரும் பல ஆண்டுகளாக ஒன்றாக பணி செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நண்பர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் எழும்பூரில் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ரங்கநாதனை சக காவலர்களான நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து எழும்பூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து ஆனந்த், மணிபாபு, சுந்தர்ராஜன் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
இதில், பணியிட மாறுதலுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை பேசி, பணியிட மாறுதல் கிடைத்த பின்னர் பேசியபடி பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் ரங்கநாதன் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர்கள் ஆனந்த், மணிபாபு, சுந்தர்ராஜன் ஆகிய 3 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க குற்றச் சாட்டுக்கு உள்ளான 3 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்தார். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.