இழப்பீட்டுத்தொகை ஆண்டிற்கு ரூ.20,000 கோடி நிறுத்தம்; மாநிலத்தின் நிதி பற்றாக்குறை அதிகரிப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு!!
கடந்த 2½ ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 1.7.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2016, 2017 மற்றும் 2019-ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த காலங்கள் மற்றும் தற்காலிக பணிநீக்க காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு (பார்வைத் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, லோக்கோமோட்டர் குறைபாடு) போக்குவரத்துப்படி ரூ.2,500 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2½ ஆண்டுகளில் மட்டும் 60,567 பேருக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அரசு அலுவலர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாடு சந்தித்த இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத பெரும் செலவினங்கள், இவற்றுக்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி ஏதும் பெறப்படாத நிலையில்,அதனை மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாகவும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கான மாநில அரசுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை ஆண்டிற்கு ரூ.20,000 கோடி நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக மாநிலத்தின் நிதி பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளது. எனினும் அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையை சீர்செய்து உயர்த்திட தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும். எனவே, இந்த சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.