அனைத்துக்கட்சி எம்.பிக்கள், அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு…! 

 

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.37,907.19 கோடி ஏற்கெனவே கோரியுள்ளது. இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 19,692.67 கோடி ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாயும் உள்ளடக்கியதாகும்.

“மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அதோடு, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாட்டிற்கு வந்து, மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை 7-12-2023 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பெருத்த பாதிப்புகளை ஒன்றியக் குழுவினர் 20-12-2023 அன்று நேரில் பார்வையிட்டனர். ஒன்றியக் குழுவினர் இம்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்திடத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து தந்திருந்தது. இதுமட்டுமின்றி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் 26-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்று, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2-1-2024 அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார். ஆனால், ஒன்றிய குழுக்களின் வருகைக்குப் பின்னரும், ஒன்றிய அமைச்சர்கள் பார்வையிட்டதற்குப் பிறகும், நிவாரணத் தொகை கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டு கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை நிவாரணப் பணிகளுக்கென எந்தவொரு நிவாரணத் தொகையும் பெறப்படவில்லை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டபோது, குறுகிய காலத்திற்குள் ஒன்றிய அரசு நிவாரண நிதியினை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இரண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழையெளிய, நடுத்தர மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும், தமிழ்நாடு அரசு இதுவரை 2,100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்புத் திட்டத்தினையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு கோரியுள்ள 37,907.19 கோடி ரூபாயினை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *