அங்கீகாரம் நீட்டிக்கப்படாத அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கற்பித்தல் மானியம் நிறுத்தம்; கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு உரிய காலத்தில் கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான வழி காட்டு நெறிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-பள்ளிகளில் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே மானியத்தை வழங்கவேண்டும். அரசு ஒப்புதல் அளித்த இடங்களில் தான் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதுதவிர ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மறு நியமனம் செய்யப்பட்டிருந்தால் அதற்கு அரசின் அனுமதி உள்ளதா என்பதையும், மாணவர்கள் எண் ணிக்கை மற்றும் வருகைப் பதிவேட்டையும் சரிபார்க்க வேண்டும். பராமரிப்பு மானியம் நிர்ணயிக்கும்போது பள்ளிக்கான சொத்துகளில் இருந்து கிடைக்கப்பெறும் ஆண்டு வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளின் அங்கீகார ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அப் போது அங்கீகாரம் நீட்டிக்கப்படாத பள்ளிகளுக்கு, கற்பித்தல் மானியத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.