இடைக்கால பட்ஜெட் மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட்; திருமாவளவன் தாக்கு!

28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் மக்களவையில் படித்தார். 24 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட்டின் முதல் பகுதி முழுவதும் கடந்த ஐந்தாண்டு கால பாஜக அரசின் சாதனைகள் எனப் பலவற்றை அவர் பட்டியலிட்டார். 4 பக்கங்கள் மட்டுமே கொண்ட பட்ஜெட்டின் இரண்டாம் பகுதியில்தான் நேரடி மற்றும் மறைமுக வரிகள் பற்றியும் பொருளாதார நிலை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. பழைய வரிகளே தொடரும், புதிய வரி எதுவும் இல்லை, வரி விலக்கும் இல்லை என்பதைத்தான் அந்தப் பகுதியில் நிதியமைச்சர் கூறியிருந்தார். தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்பதால் கவர்ச்சிகரமான பல அறிவிப்புகள் இதில் செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இல்லை. மோடி அரசின் பொருளாதார நிலை கவர்ச்சிகரமான அறிவிப்புகள் செய்யும் அளவுக்கு ஆரோக்கியமாக இல்லை, அது கடுமையான சிக்கலில் இருக்கிறது என்பதைத்தான் இதன்மூலம் அறியமுடிகிறது.100 நாள் வேலை திட்டத்துக்கான வேலை அட்டையோடு ஆதாரை இணைக்கவில்லை என்ற காரணத்தினால் சுமார் 11 கோடி பேரின் வேலை அட்டைகள் இரத்து செய்யப்பட்டு அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், இப்படி அட்டைகளை ரத்து செய்யும் நடவடிக்கையின் மூலமாக அரசாங்கத்துக்கு 2.7 லட்சம் கோடி ரூபாய் இலாபம் கிடைத்திருக்கிறது என்று பட்ஜெட்டில் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார். நேற்று குடியரசுத் தலைவர் உரையில் 4 கோடியே 10 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த பட்ஜெட் உரையிலோ மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கை அடையப் போவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு புள்ளி விவரங்களில் எது உண்மை என்பதை நிதியமைச்சர் தான் விளக்க வேண்டும். வீடுகளின் கூரைகளில் ‘சோலார் பேனல்களை’ பொருத்துவதன் மூலம் 300 யூனிட்டுகள் வரை மின்சாரத்தைப் பெற முடியும் என்று இதில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் மின்சார வாகனங்களுக்கு இதில் ‘சார்ஜ்’ செய்ய முடியும் என்றும், ஏராளமான இளைஞர்கள் இதனால் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 100 ஜிகா வாட் எரிசக்தி கூரைகள் மீது பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 7.40 ஜிகா வாட் மட்டுமே அப்படி உற்பத்தி செய்யப்பட்டது என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைச்சகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாதது முக்கியமான ஒரு காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்துவோம் என்று சொல்லி இருப்பது முன்பு சொல்லப்பட்டது போல வெற்று அறிவிப்புதானே தவிர வேறு அல்ல. மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த விமான நிறுவனமும் விற்கப்பட்டு விட்ட நிலையில் இந்தியாவில் உள்ள தனியார் விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்திருப்பதாக பட்ஜெட்டில் பெருமைபட்டிருப்பது நகைப்புக்குரியதாகும். மாநிலங்களில் வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் அதற்காக 50 ஆண்டு காலத்துக்கு வட்டி இல்லாத கடன்களை கொடுப்பதற்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. 16 ஆவது நிதிக் குழுவில் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு நீதியை உறுதிசெய்தாலே மாநிலங்கள் தடையின்றி வளர்ச்சி கண்டுவிடும். அதைச் செய்யாமல் செஸ், சர்சார்ஜ் என கூடுதல் வரிகளை விதித்து மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு கடன் கொடுக்கிறோம் எனச் சொல்வது சனநாயகத்துக்கு உகந்ததல்ல. மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டத்தை வகுப்பதற்கு உயர் அதிகாரக் குழு ஒன்று நியமிக்கப்படும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டு இருக்கிறது. அது தொகுதி மறு சீரமைப்பைத்தான் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறதா எனத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பி.எம் கிஸான் திட்டத்துக்கான நிதி அதிகரிக்கப்படவில்லை. தொகையும் உயர்த்தப்படவில்லை. அது போல மகளிருக்கு எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எந்த உயர்வும் அறிவிக்கப்படவில்லை. இந்தியா டுடே – சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில், 72 சதவீதம் பேர் வேலையின்மை ஒரு தீவிரமான பிரச்சினை என்று கூறியுள்ளனர்; 56 சதவீதம் பேர் இது ‘மிகத் தீவிரமான பிரச்சனை’ எனக் கூறியுள்ளனர்; 62 சதவீதம் பேர் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அன்றாட செலவுகளை நிர்வகிப்பதே இப்போது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும்தான் பயனடைந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது ஏதோ நாட்டில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடுவதுபோல பட்ஜெட்டில் கதையளந்திருப்பது அப்பட்டமான மோசடியாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் பரந்து பட்ட மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லாத, பொய்யான புள்ளி விவரங்களையும், ஏமாற்றும் வாக்குறுதிகளையும் கோர்த்துக் கட்டப்பட்ட பட்ஜெட்டே இது. மோடி அரசின் இந்த மோசடி பட்ஜெட்டை மக்கள் நிராகரிப்பது உறுதி என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *