ஆன்லைன் மூலம் கடன் வாங்கியவருக்கு அதிர்ச்சி; புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ரூ.5 லட்சம் சுறுட்டல்!
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர். கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால் நண்பர் ஒருவரது உதவியால் ஆன்லைன் மூலம் ரூ.24 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். 15 நாட்களுக்கு பிறகு ஆன்லைன் மூலம் கடன் கொடுத்தவர்கள் ரூ.40 ஆயிரம் செலுத்த வலியுறுத்தியதால், சிரமப்பட்டு கடனை அடைத்துள்ளனர். அதன் பின்பு லோன் ஆப் மூலம் அவருக்கு படங்கள், வீடியோக்கள் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் அவரது புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதனை இணையதளத்தில் பதிவிடப் போவதாகவும் அதை தவிர்க்க, பணம் அனுப்பவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். ஜாமீன் தாரராக இணைக்கப்பட்டவரின் செல்போனுக்கும் ஆபாச – படம், வீடியோ வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரூ.5 லட்சம் செலுத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இணையதளத்தில் உள்ளவர்கள் அடிக்கடி முகவரியை மாற்றுவதால் அடிக்கடி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.