மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாகும்; கனிமொழி எம்.பி. உறுதி!
நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் இருக்கக்கூடிய அரசு, கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை சிதைத்து கொண்டிருக்கிறது. அதேபோல மக்களை பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு, நம்முடைய ஒற்றுமையை குலைத்து, ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து வருகிறது. மக்களுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பது, மீனவர்களுடைய உரிமைகள் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுவது இவை எல்லாவற்றையும் மறக்கடிக்க செய்ய வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ, சாதி பிரச்சினைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள்தான் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள். நிச்சயமாக நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாகும். அந்த ஆட்சி மாற்றம் இந்த நாட்டை மீட்டெடுக்கும். இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும். மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அது அழைத்துச் செல்லும்.இவ்வாறு அவர் பேசினார்.