சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து பிரிவில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜஸ்டின் (வயது 53) பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அக்கினியானா குளம் அருகே நேற்று பிற்பகலில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்று செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில், போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.