நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடவேண்டும்; கே.எஸ்.அழகிரி…!
2018 முதல் 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ.9 ஆயிரத்து 208 கோடி. இதில் பா.ஜனதா மட்டும் ரூ.5 ஆயிரத்து 270 கோடி நிதியாக பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 57 சதவீதமாகும். அதேபோல, 2022-23-ம் ஆண்டில், பா.ஜனதா கட்சி தேர்தல் பத்திர நன்கொடையாக ரூ.2 ஆயிரத்து 120 கோடி பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 61 சதவீதமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி ரூ.171 கோடி தான் பெற முடிந்தது. இத்தகைய சமநிலையற்ற தன்மையின் காரணமாக தேர்தல் அரசியலில் பா.ஜனதா, தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகளை குவித்து வருவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது. இதன்மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடவேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த அனைத்து சட்ட திருத்தங்களையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தேர்தல் அரசியலில் வெளிப்படைத்தன்மையும், சமநிலைத்தன்மையையும் உருவாக்குகிற வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற மத்திய பா.ஜனதா, கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தேர்தல்கள் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.