நீதிபதியான பழங்குடியின பெண்!
தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி, டி.என்.பி.எஸ்.சி. எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 472 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்முக தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவும் வெளியானது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண்ணும் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். ஸ்ரீபதிக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும், குழந்தை பிறந்த 2-வது நாளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்து எழுத்து தேர்வில் கலந்துகொண்டு அவர் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.