குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1,448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. வளர்ச்சியடைந்த மாநிலமாக கருதப்படும் தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 குழந்தை திருமணங்கள் அதாவது ஆண்டுக்கு 3 ஆயிரத்து 650 குழந்தை திருமணங்கள் நடப்பதாக தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நெல்லை மாவட்டத்துடன் ஒப்பிடும்பொது தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் குழந்தை திருமணங்களும், அதன் விளைவாக குழந்தை மகப்பேறுகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் தான் குழந்தை திருமணங்களுக்கான முக்கிய காரணம். இந்த மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வாழும் பழங்குடியினரும், பிற சமுதாய மக்களும் பொருளாதாரத்தில் மிகமிக பின்தங்கியவர்களாக உள்ளனர். உள்ளூரில் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், குடும்பத்தில் உள்ள தாயும், தந்தையும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லும்போது தங்களின் பெண் குழந்தைகளை உடன் அழைத்து செல்வதோ அல்லது வீட்டில் தனித்து விட்டு செல்வதோ சாத்தியமில்லை. அதன் காரணமாகவே தங்களின் பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டு, வேலைக்கு செல்கின்றனர்.இந்த மாவட்டங்களில் உள்ளூர் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமல் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதை அரசு உணரவேண்டும். குழந்தை திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தை திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை குறித்த பாடங்களை பள்ளிக்கல்வியில் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலமே குழந்தை திருமணங்களையும், குழந்தை மகப்பேறுகளையும் தடுக்க முடியும். இதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial