சகல தோஷம்-பாவம் போக்கும் மாசி மாத சிறப்புகள்..!!!
மாசி மாதத்தில் வரக்கூடிய 30 நாட்களுமே மிக சிறப்பு வாய்ந்தவை தான். இந்த மாசி மாதத்தில் தான் மகாவிஷ்ணுவாக திருமால் அவதாரம் எடுத்தார் இந்த மாசி மாதத்தில் நீங்கள் மனதில் நினைத்துக்கொண்டு தொடங்கும் செயல்கள் அனைத்தும் கண்டிப்பாக நல்ல பலனை பெற்று தரும். அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப்படுகிறது.சிவபெருமான், குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராணக் கூற்று. பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது ஐதீகம். மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.மாசி மாதத்திற்கு அதி தேவதை மகாவிஷ்ணு. அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழி பட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும். மாசி மகத்தன்று சிவபெருமான், பள்ளிகொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தினார். வல்லாள மகா ராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கிறது.மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடைபெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான்.வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ் கிறார். கணவனால் புறக்கணிக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், “இறைவா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!’ என்று வேண்டிப் பெற்றவர். ஆடல் வல்லானின் அற்புதங்களை நெஞ்சில் நிறுத்தி, “திருவந்தாதி’ என்னும் அரிய நூலை அருளினார். 101 பாடல்கள் கொண்ட இந்த நூலில், பத்து பாடல்களுக்கு ஒருமுறை தாம் பெற்ற இறையனுபவத்தைக் கூறியுள்ளார். இரட்டை மணிமாலை என்னும் நூலும் காரைக்கால் அம்மையார் இயற்றியதே.அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடியருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது இம்மாசி மாதத்தில்தான். கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தண்டிகை என்னும் தலத்தில் சௌந்தரநாயகி உடனுறை சனத் குமாரேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து எஸ்.புதூர்க்கு பேருந்துகள் உண்டு. எஸ்.புதூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிசெல்லலாம்.இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத் குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத்தண்டிகை வந்து சோமதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமியாகும்எனவே எதிர்வரும் (24-2-24)மாசி மாதப் பௌர்ணமி அன்று திருத்தண்டிகை வந்துசோம தீர்த்தத்தில் நீராடி சௌந்தரநாயகி உடனுறை சனத் குமாரேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு அவர்கள் இழந்தசெல்வங்களை மீண்டும் அடைவர்.மாசி மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலி பண்டிகை, ஏகாதசி விரதம், மஹாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி போன்ற சிறப்புமிக்க வழிபாடுகள் நடத்தப்படுகிறது.திருமணமான பெண்கள் இந்த மாசி மாதத்தில் தான் தாலி கயிற்றினை மாற்றி கொள்கிறார்கள்.மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு விரதம் மேற்கொன்டு அருகம்புல் மாலை சார்த்தி வழிபாடு செய்து வந்தால் தங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து தோஷங்களும் நீங்கும்.இந்த மாதத்தில் பெரும்பாலும் திருமண சுப நிகழ்ச்சிகள், வீடு கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியம் நடைபெறும்.ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவே வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.ஏழை எளியவர்களுக்கு மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு இந்த மாதத்தில் உணவு கொடுப்பது மூன்று மடங்கு பலன்களை அள்ளித்தரும்.பௌர்ணமிகளில் மாசிப் பௌர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது.மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசிகளில் விரதம் இருப்பது கோடி புண்ணியம் கிடைக்க செய்யுமாம்.மாசிமாதப் பௌர்ணமி தினத்தில் வடஇந்தியாவில் ஹோலிப்பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.உயர் நிலை படிப்பு பயில விரும்புபவர்கள் மற்றும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் மாசி மாதத்தில் அமிர்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் மாசி மாதம் முழுவதும் கோவில்களைச் சார்ந்த நீர்நிலைகளில் புனித நீராடல் மேற்கொள்ளப்படுகிறது.மாசி மாதம் மகாவிஷ்ணுவிற்கு உகந்த மாதமாகும். எனவே மாசி மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து வழிபட வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும்.இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்டது மாசி மாதம்.