ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணிநாடுனர்களுக்கு உச்ச வயது உயர்வு!
கடந்த 2020-ம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 40 என்றும், இதர பிரிவினருக்கு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர், 2021-ம் ஆண்டு அந்த உச்ச வயது வரம்பினை பொது பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின்னர், 1.1.2023 முதல் பொது பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயம் செய்து மனிதவள மேலாண்மை துறை அரசாணையாக வெளியிடப்பட்டன.அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2023) ஆகஸ்டு மாதம் உச்ச வயது வரம்பை பொது பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்தி அரசாணையாக வெளியிடப்பட்டு இருந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணிநாடுனர்களுக்கு உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53-ம், இதர பிரிவினருக்கு 58-ம் உயர்த்த முடிவு செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.அதனை செயல்படுத்தும் விதமாக, அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.