மக்களை காக்கும் பிரதமர் மோடி; அண்ணாமலை புகழாரம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பத்தாண்டு கால நல்லாட்சியில், உலக அளவில் இந்தியா இன்று முதன்மை நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில், பதினொன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருப்பதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா உலகப் பொருளாதாரத்தில், மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுவதும், நமது பிரதமரின் ஊழலற்ற நல்லாட்சிக்கான சாட்சி.கடந்த பத்து ஆண்டுகளில், போக்குவரத்து வசதி, பாதுகாப்புத் துறை, தொழில்துறை, சுற்றுலாத் துறை, நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்துத் துறைகளும் பல மடங்கு முன்னேறியிருக்கின்றன. சுதந்திரம் கிடைத்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் போக்குவரத்து வசதிகள் இன்றி, மின்சாரம் இன்றி இருந்து கிராமங்கள் அனைத்திலும் இன்று அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இன்று நாட்டின் பிற பகுதிகளோடு போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளன. பாரதம் இன்று ஒரே நாடாக சிந்திக்கிறது என்றால் அது மிகையாகாது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விவசாயிகள் கௌரவ நிதி, புதிய தொழில் முனைவோருக்கான முத்ரா கடனுதவி, மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்கள் என, பத்து ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பலனடையும்படி செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.அதன் அடுத்தபடியாக, இன்றைய தினம், நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், வரும் 2047 ஆம் ஆண்டுக்குள், நமது நாட்டை ஒரு வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தை நிறைவேற்றும் படியாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு ஜாதியினரையும் மேம்படுத்துவதில் மத்திய அரசின் முழுமையான அணுகுமுறையை இந்த இடைக்கால பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளது.பிரதமரின் அன்ன யோஜனா போன்ற மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள், நாட்டின் 80 கோடி குடிமக்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை, வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்க உதவியுள்ளது.பிரதமரின் ஜன்தன் கணக்குகளை பயன்படுத்தி, ரூ. 34 லட்சம் கோடி மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதன் மூலம் ரூ. 2.7 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. PM-SVANidhi, PM-JANMAN, PM-Vishwakarma, PM MUDRA, PM KISAN, PM SHRI, PM AWAS, PM Ujjwala, Skill India Mission மற்றும் பல திட்டங்கள், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வீட்டின் மேற்கூரைகளில் சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 1 கோடி வீடுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரத்தை அறிவித்ததற்காக நமது நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ. 11,11,111 கோடி நிதி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் எரிசக்தித் துறைகளில் பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பெரும்பங்கு வகிக்கும். ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக, தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதியானது, தனியார் துறையில், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க ஊக்குவிப்பதாக அமையும். இது நமது ஆத்மநிர்பர் எனும் சுயசார்பு பாரதம் என்ற முன்னெடுப்பையும் பல மடங்கு ஊக்குவிப்பதாக அமையும்.பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும், வருமான வரித் துறையின் வரி கோரிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த நமது மாண்புமிகு நிதியமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கோரிக்கைகளில் பல, 1962 ஆம் ஆண்டுக்கு முந்தையவை. வருமான வரி செலுத்தும் சுமார் 1 கோடி பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்சித் பாரத் திட்டத்தின் மூலம் புதிய சீர்திருத்தங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வசதியாக, 50 ஆண்டு கால வட்டியில்லா கடனாக ₹75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும், மேலும் 2019-20 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதியான ரூ. 11.45 லட்சம் கோடியிலிருந்து, தற்போது 2024-25 ஆம் ஆண்டில், ரூ.22.75 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதும், கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *