ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடும்போது ஜாதி பெயரை சொல்ல “கோர்ட்டு தடை”
மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு பின்னர் சிறப்பு சட்டம் மூலம் தற்போது நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ் பெற்றவை. இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்து விடும் போது, உரிமையாளர்களின் பெயருடன் ஜாதிப்பெயரை குறிப்பிட கூடாது என்று கடந்த 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 2 வருடங்களாக அரசு அதிகாரிகளின் முன்னிலையில் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல் ஜாதிப்பெயருடன் காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. எனவே, இந்த வருடம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளின் உரிமையாளர் பெயருடன் ஜாதிப்பெயரை குறிப்பிட கூடாது மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனு 04-01-2024 நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், காளைகளை அவிழ்த்து விடும்போது உரிமையாளரின் பெயரை மட்டும் அறிவிக்க வேண்டும். ஜாதிப்பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும். அத்துடன், தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.