ஆசிரியர் சங்கங்கள்தமிழக அரசிடம்கோரிக்கை
தொடக்கக் கல்வித்துறை தனித்துவத்துடன் செயல்படக்கூடிய வகையில் அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிடம் முன்வைத்தன. இந்தக் கோரிக்கையின் நோக்கம் என்னவென்றால், அரசாணை 101, 108 வெளியிடப்படுவதற்கு முன்பு தொடக்கக் கல்வித்துறை நிர்வாக ரீதியில் எவ்வாறு செயல்பட்டதோ அவ்வாறு செயல்பட வேண்டும் என்பதேயாகும். ஆனால், இந்நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை எண்: 151 (பள்ளிக்கல்வித்துறை) நாள்: 09.09.2022 ஐ பிறப்பித்துள்ளது.
10.09.2022ல் சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், மாநாட்டில் தான் வெளியிடும் மிக முக்கிய அறிவிப்பாக நினைத்து வெளியிட்டது தான் “அரசாணை 151 வெளியிடப்படும்” என்ற அறிவிப்பு. இந்த அரசாணையின் மூலமாகத் தொடக்கக் கல்வித்துறைக்கு விமோசனம் பிறந்து விட்டது என்றும், இனிமேல் தொடக்கக் கல்வித்துறை முன்பு போல் தனித்துவத்துடன் செயல்பட வாய்ப்பு உருவாக்கியுள்ளது எனவும் அரசாணையைப் பார்க்காமலேயே அரசுக்கு நன்றி கூறிய சங்கத் தலைவர்களும் உள்ளனர்.
அரசாணை 101, 108 ஐ ரத்து செய்யாமலேயே, அரசாணை 101 ஐ மறுசீரமைப்புச் செய்து அரசாணை 151 ஐ வெளியிட்டதிலிருந்தே நம்முடைய கோரிக்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. இந்த அரசாணை 151ன் மூலம் தொடக்கக் கல்வித்துறைக்கு என்ன கிடைத்துள்ளது? தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு என்ன கிடைத்துள்ளது? என்பதை ஆய்வு செய்தால் எதிர்பார்த்த எவ்வித பயனும் இல்லை என்றே சொல்லலாம்.
அரசாணை 151ன் மூலம் புதிதாக சில மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணியிடங்கள், அலுவலகக் கண்காணிப்பாளர் பணியிடங்கள் என சில அலுவல் ரீதியான பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் சிலருக்குப் பதவி உயர்வு வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றபடி தொடக்கக் கல்வித்துறையின் வளர்ச்சி, தனித்துவம், கடந்த கால நிர்வாக நடைமுறை ஆகியவற்றைக் கொண்டு வரும் எந்த ஏற்பாடும் அரசாணை 151ல் இல்லை என்றே சொல்லலாம்.
அரசாணை 151 வெளியிடப்பட்ட பின்பும் இன்று வரை பள்ளிக்கல்வி ஆணையரே ஒட்டுமொத்த தொடக்கக் கல்வித்துறைக்கும் உத்தரவுகளை வெளியிடும் உயர் அலுவலராக தொடர்ந்து செயலாற்றி வருகிறார். மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களே தொடக்கக் கல்வித்துறை தொடர்பான செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் அலுவலர்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசாணையின் மூலமாக தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை மாவட்டக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறி தொடக்கக் கல்விக்கென கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலர், இடைநிலைக் கல்விக்கென கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கக் கல்வித்துறையில் எவ்வித மாற்றமும் நிகழப் போவதில்லை.
எனவே, ஜாக்டோ ஜியோ மாநாட்டில் மிகப்பெரிய அறிவிப்பாக எண்ணி முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பும் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். களநிலவரம் தெரியாமல் உயர் அலுவலர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் மட்டுமே ஆட்சியாளர்கள் செயல்படுவார்களேயானால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் எவ்விதத்திலும் அதிகாரிகளைப் பாதிப்பதில்லை என்பதே கடந்த கால அனுபவமாகும். எனவே, இது போன்ற சூழலில் ஆட்சியாளர்கள் மிகுந்த மதிநுட்பத்துடனும், நுணுக்கமான சிந்தனைத் திறனுடனும் செயல்பட வேண்டும்.
தற்போதும் தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுடனேயே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையான களநிலவரம். இதை யாராலும் மறுக்க முடியாது. தொடக்கக் கல்வித்துறை என்பது முன்பு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தொடக்கக்கல்வி இயக்குநர் என்ற வரிசையில் அலுவலர்களின் நிர்வாகத்தில், அவர்களின் தொடர்ச்சியான, சீரான உத்தரவுகளின் படி செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது தொடக்கக்கல்வித்துறை என்பது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு இயக்குநர்களின் உத்தரவுகளின் படி செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவின்படி சீராக இயங்கி வந்த தொடக்கக்கல்வித்துறை தற்போது பள்ளிக் கல்வி ஆணையர், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், மாநில வயது வந்தோர் மற்றும் முறைசாராக் கல்வி இயக்குநர் என்று பல இயக்குநர்களின் உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டிய சூழலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றுவதற்குள் ஆசிரியர்களின் நிலை பெரும் துயரத்திற்குள்ளாகி விடுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது மாணவர்களின் கல்வி என்பதை எந்தவொரு உயர் அலுவலரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. மேற்கண்ட அலுவலர்களின் அடுத்தடுத்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டிய சூழல் மற்றும் புள்ளி விவரங்களை கொடுக்க வேண்டிய சூழல் ஆகியவை ஆசிரியர்களின் கற்பித்தல் நேரத்தையே காவு கொள்கிறது என்பதே நமக்குள்ள மிகப்பெரிய கவலையாகும். இன்றைய கல்விச்சூழல், களச் சூழல், நிர்வாக நடைமுறை ஆகியவற்றை சிரமத்துடன் எதிர்கொள்ள பல மூத்த ஆசிரியர்கள் “ஆசிரியப் பணியை விட்டு எப்போது போவோம்” என்ற மனநிலைக்கு தற்போது வந்து விட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இது மட்டுமா? இவ்வளவு போதாதென்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வருவாய்துறை அலுவலர்களால் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி என்பது அவர்களின் ஒட்டுமொத்த கல்விப் பணியையும் பெருமளவில் பாதித்துள்ளது. வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கல், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில் பணி, வாக்குச்சாவடிகளில் பணி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி என இவர்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இவர்கள் நாள்தோறும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதுதான். அப்படியானால் இப்பணியில் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் பணி என்னாவது? இதைப் பற்றிய சிந்தனை எந்த உயர் அலுவலர்களுக்கும் வராதது ஏன்? ஆட்சியாளர்களுக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியாதா? தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் கூறுவதை மட்டுமே கேட்டுச் செயல்படுவது தான் ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறனா? என்ற கேள்விகள் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஆசிரியர்களின் மனங்களிலும் எழுந்துள்ளது.
எண்ணும் எழுத்தும், புதிய பாரதம், இல்லம் தேடிக் கல்வி, தேவையற்ற குறுவளப் மையப் பயிற்சி, கல்வித்துறையின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவாத EMIS இணையதளப் பதிவுகள் ஆகியவைகளில் மனம் வெந்து, நொந்து போயுள்ள தமிழ்நாட்டு ஆசிரியர்களின் உள்ளக் கொதிப்பை இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டு ஆசிரியர்களைத் தேவையற்ற பணிச்சுழல்களில் இருந்து விடுவித்து தொடக்கக்கல்வித் துறையின் உண்மையான வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்பதே நமது பெரு விருப்பமாகும்