ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!
நாட்டின் ராணி மிகச்சிறந்த ராமபக்தை. எந்நேரமும் ராம நாமம் சொல்லிக் கொண்டிருப்பாள். ஆனால், ராஜா அப்படி கிடையாது. நாடு, ராஜாங்கம், மந்திரிகள் என்று மக்கள் விஷயங்களில் தான் அதிக கவனம் செலுத்துவார். ஒருநாள் ராணி ராஜாவிடம் என்னங்க! ஒரு நாளாச்சும் என் கூட ராமர் கோயிலுக்கு வருவீங்களா! நான் மட்டும் தான் தனியே போறேன். ராமனை கோயிலுக்கு வந்து வணங்கினால், நம்ம நாட்டுக்கு இன்னும் பாதுகாப்பு பலப்படும். மக்கள் நிம்மதியா இருப்பாங்க! செல்வவளம் பெருகும், என்றெல்லாம் சொன்னாள். ஆனால், ராஜா அதைக் கேட்க மறுத்துவிட்டார். ராணி வருத்தத்துடன் கோயிலுக்கு போய் விட்டாள். அன்று இரவில் ராஜா உறக்கத்தில் ராமா… ராமா…ராமா… என்று சொல்ல ஆரம்பித்தார். விழித்துக் கொண்ட ராணி, ராஜா இப்படி ராமநாமம் சொல்வதைக் கேட்டு மகிழ்ந்தாள். மறுநாள் ஊரெங்கும் விழாக் கொண்டாட உத்தரவு போட்டு விட்டாள்.மறுநாள் காலையில் விழித்த ராஜா, ஊரே விழாக் கொண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து, மந்திரியிடம் விசாரித்தார். மந்திரி ராணியின் உத்தரவைச் சொல்ல, ராணியை அழைத்தார் ராஜா.எதற்காக விழா கொண்டாட உத்தரவு போட்டாய், என்று அதட்டலாகக் கேட்டார்.மகாராஜா! நேற்று இரவில் நீங்கள் ராமா..ராமா…ராமா என துக்கத்தில் சொன்னீர்கள். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட இவ்வாறு செய்தேன் என்றதும், ராஜா தேம்பித்தேம்பி அழஆரம்பித்து விட்டார். ராஜா எதற்கு அழுகிறார்? ஒன்று ராணியைத் திட்டியிருக்க வேண்டும். அல்லது தன் பக்தியை பெருமைப்படுத்தியதற்காக பாராட்டியிருக்க வேண்டும். இரண்டும் கெட்டானாக இவர் அழுகிறாரே என திகைத்த மந்திரி பிரதானிகளும், ராணியும் திகைத்தனர். ராணி அவரை சமாதானப்படுத்தி அவர் அழுததற்கான காரணம் கேட்டாள். அடியே ராணி! இத்தனை நாளும் என் நெஞ்சுக்குள் அந்த ஸ்ரீராமனைப் பூட்டி வைத்திருந்தேனடி! அவனது பெயரைச் சொன்னதன் மூலம் அவன் என் வாய் வழியாக வெளியேறி விட்டானே! இனி அவனை எப்படி என் நெஞ்சுக்குள் மீண்டும் கொண்டு வைப்பேன், என்றார் ராஜா. தனது ராம பக்தியை விட, ராஜாவின் ராமபக்தி எவ்வளவோ உயர்ந்தது என்பதை அறிந்த ராணி மகிழ்ந்தாள். அவரது பக்திப்பார்வை தனதுபார்வையை விட உயர்ந்தது என பெருமையாகப் பேசினாள். மந்திரிகளும் சந்தோஷப்பட்டனர். மக்களுக்கு இந்தத் தகவல் தெரிந்து, தாங்களும் மன்னரைப் பாராட்டி விழாக் கொண்டாடியதில் அர்த்தமிருக்கிறது என்று மகிழ்ந்தனர்.
🍃சர்வம் விஷ்ணு மயம்