வடலூர் மற்றும் மேட்டுக்குப்பம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை சேர்ந்த சுமார் 100 பேர் ஈரோட்டில், வள்ளலார் 200 முப்பெரும் விழாவில் கலந்துகொண்டனர்.
07.08.2023, வடலூர்
ஈரோட்டில், வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அருள்நெறி பரப்புரை ஊர்வலமும் நடைபெற்றது. முப்பெரும் விழா தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மாவட்டம் தோறும் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. 45-வது வாரமாக ஈரோட்டில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சம்பத் நகர் கொங்கு கலையரங்கில் நடந்தது. காலை 6 மணிக்கு ஈரோடு மாவட்ட அனைத்து சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் அருட்பெருஞ்ஜோதி ஞானதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அகவல் பாராயணம் நடந்தது.
ஊர்வலம் காலை 7.45 மணிக்கு வள்ளலார் வழித்தோன்றல் கி.உமாபதி, தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200-வது முப்பெரும் விழா சிறப்பு உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஏ.பி.ஜெ.அருள் என்கிற என்.இளங்கோ, வடலூர் தலைமை சங்க தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம், செயலாளர் ஜி.வெற்றிவேல், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த சன்மார்க்க சங்க தலைவர் பொன்.சிவஞானம் ஆகியோர் சமரச சுத்த சன்மார்க்க கொடியை ஏற்றினர். தொடர்ந்து திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து வள்ளலார் 200 அருள்நெறி பரப்புரை ஊர்வலம். பேரணிக்கு டாக்டர் அருள்நாகலிங்கம் தலைமை தாங்கினார். வள்ளலார் வழித்தோன்றல் உமாபதி, மஞ்சுளா வள்ளலார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் மீனாட்சி சுந்தரனார் ரோடு, பெருந்துறை ரோடு வழியாக சம்பத் நகரில் முப்பெரும் விழா நடக்கும் கலையரங்கில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கோலாட்ட கலை குழுவினரும், சமரச சுத்த சன்மார்க்கத்தினரும், பொதுமக்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு வள்ளலார் 200 முப்பெரும் விழா கொண்டாட்டம் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக சன்மார்க்கமும், சுத்த சன்மார்க்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்குக்கு டாக்டர் அருள் நாகலிங்கம் தலைமை தாங்கினார். திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 முப்பெரும் விழாவின் சிறப்பு உயர்நிலை குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார். சொற்பொழிவாளரும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் உயர்நிலை குழு உறுப்பினருமான சுகி.சிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வள்ளலார் வரலாறு குறித்தும், சன்மார்க்க நெறிமுறை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார். மாணவ-மாணவிகளுக்கு பரிசு இதைத்தொடர்ந்து, பிற்பகலில் ‘மரணமில்லா பெரு வாழ்வு’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில் ஈரோடு கதிர்வேல் பங்கேற்று பேசினார். பின்னர் திருவருட்பா பொருள் விளக்க இணைப்பிசை ஆடலமுதம் நிகழ்ச்சியும், ஜோதி வழிபாடும் நடந்தது. மேலும் வள்ளலார் 200 முப்பெரும் விழாவை முன்னிட்டு ஈரோடு திண்டலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவர்கள் 95 பேருக்கும், 5 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் 3 பிரிவுகளாக கட்டுரை, ஓவியம், பேச்சு, இசை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வள்ளலார் 200-வது முப்பெரும் விழாவையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையாளர் மெய்கண்ட தேவன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் மேனகா, உதவி ஆணையாளர்கள் ரமணி காந்தன், சுவாமிநாதன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த ஆய்வர்கள், செயல் அலுவலர்கள், பணியாளர்கள், வடலூர் மற்றும் மேட்டுக்குப்பம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்துகொண்டனர், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை சேர்ந்த பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T