ராணுவத்தில் சேர கடலூரில் குவிந்த இளம்பெண்கள்!
அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், பெண்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது. இதில் ஏற்கனவே நடந்த எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. அதன்படி எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தெலுங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்கள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குவிந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், அண்ணா விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் உடற்தகுதி தேர்வுக்கு வந்த இளம்பெண்கள், சில்வர் பீச்சுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள சாலையில் வைத்து இளம்பெண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. அதன்பிறகு உடற்தகுதி தேர்வுக்கான ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இந்த ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 13-ம்தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறும்.