அன்னதானத்திற்கு பணம் செலுத்தனுமா? இனி”கியூ.ஆர்.” கோடு தான்!
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத்துக்கு கோவிலுக்கு வரும் பக்தர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பழனி முருகன் கோவில் அன்னதான நன்கொடைக்கு பக்தர்கள் நிதி செலுத்தும் வசதி எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது கோவில் தங்கும் விடுதி, வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற வரும் தண்டபாணி நிலையம் ஆகிய இடங்களில் இதற்காக கியூ.ஆர். கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அங்கு உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த கியூ.ஆர். கோடு மூலம் பக்தர்கள் தங்களது செல்போனில் ஜி.பே., போன்பே போன்ற யு.பி.ஐ. பரிவர்த்தனை மூலம் குறைந்தபட்சம் ரூ.100 முதல் நன்கொடை செலுத்தலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.