“என் மண் என் மக்கள்” செல்லும் இடம் எங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு; மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி அண்ணாமலை கவன ஈர்ப்பு!
ஊழலுக்கு எதிராக “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் தனது நடை பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்து நேரில் குறைகளை கேட்டறிந்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செல்லும் இடங்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பினை ஏற்றுக்கொண்டு மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், இத்தனை ஆண்டுகளாக, தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் தர்மபுரி மாவட்டத்தின் பங்கு வெறும் 1.7% மட்டுமே. ஆனால் மொத்த மாநிலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு மட்டுமே 34%. இத்தனை ஆண்டுகளாக தர்மபுரி தொழில் வளர்ச்சி இல்லாமல் பின்தங்கி இருக்கிறது. தொழிற்சாலைகள் இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. ஜாதி அரசியல் செய்து, மாவட்டத்தையே கடைசியாக வைத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் தர்மபுரி மக்கள் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், தர்மபுரி மாவட்டத்தில் 31,336 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,21,410 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,32,117 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,01,522 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பும், 87,523 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,84,039 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், முத்ரா கடனுதவி 3,010 கோடி ரூபாய் என நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.