விடுதலை…..( யாருக்கு?)
விடுதலை…..( யாருக்கு?)
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 31-03-23 வெளியாகியுள்ள விடுதலைத் திரைப்படம் நடிகர் சூரி அவர்களுக்கு மிகச்சிறந்த ஆக்கத்தை அளித்துள்ளது. உன்னோடு நடந்தால் கல்லானக்காடு பாடலைத் தவிர்த்து இசைஞானி இளையராசா அவர்களின் இசை குறிப்பிடும்படி இல்லை. நடிகர் விஜய் சேதுபதியின் பங்களிப்பு இரண்டாம் பாகத்தில்தான் பேசும்படி அமையும் என்று தெரிகிறது. தமிழ்நாடு விடுதலைப் படை உருவாக மூலமாக இருந்த புலவர் கலியபெருமாள் அவர்களையும் தோழர் தமிழரசன் அவர்களின் செயல்களையும் நினைவுப்படுத்துவதாக காட்சிகள் அமையப்பெற்றுள்ளது. வாச்சாத்தி பகுதியில் காவல்துறையால் பெண்கள் கொடுமையாக துன்புறுத்தி அழிக்கப்பட்டதையும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணரமுடிகிறது.. விடுதலை அரசியலை வளர்த்தெடுக்க விடுதலைத் திரைப்படம் பயன்படுமா? அல்லது சோர்வடையச் செய்வதற்கு துணை நிற்குமா என்பதை இரண்டாம் பாகம் வெளிவந்த பிறகுதான் தெரியும். கடைசி 15 மணித்துளிகளில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ஆற்றலை உணரமுடிகிறது.
இயக்குநர் ஞானவேல், பா.இரஞ்சித் இவர்களின் வெறுப்பு அரசியலுக்கு கடந்த காலங்களில் துணைநின்றதால் விடுதலை திரைப்படத்தில் சந்தை வாய்ப்பை வெற்றிமாறன் இழந்திருப்பதைக் காணமுடிகிறது. நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமே எழுகிறது.
முதல்பாகத்தில் காவல்துறையின் வன்மங்களை மையப்படுத்திய அளவு கதையின்கரு ஆழப்படவில்லை. ஒளிப்பதிவு இயக்குநர் வேல்ராசு அவரகள் உயர்ந்து, சிறந்துள்ளார். வட மாநிலத்தவர் வந்தேறிகளாக படையெடுத்து தமிழ்நாட்டை திணரவைக்கும் இன்றைய சூழலில் இப்படம் தமிழின எழுச்சிக்கும் விடுதலை அரசியலுக்கும் வலிமை சேர்க்குமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இது வந்திருந்தால் தமிழின எழுச்சிக்கு உந்துதலாக இருந்திருக்கும். இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு வணிகத்தை திட்டமிடும் அளவிற்கு வரலாற்றின் காலத்தைக் கையாளும் முதிர்ச்சியும் நிமிர்வும் இல்லை என்றே தோன்றுகிறது.
விடுதலை மக்களுக்கா? அல்லது பார்வையாளர்களுக்கா? என்று தெரியவில்லை.