நீச்சல் பயிற்சியின் போது சோக சம்பவம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பூச்சிப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவரது தங்கை மகன் திலீப்பாண்டி (9). சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் தனது தாய்மாமன் கண்ணனின் வீட்டுக்கு வந்திருந்தான். இதனால் அந்த சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக பூச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு சிறுவன் திலீப்பாண்டியை கண்ணன் அழைத்துச்சென்றார். அப்போது கிணற்றில் நீச்சல் பயிற்சி கொடுத்தபோது, சிறுவன் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளான். அவனை காப்பாற்ற கண்ணன் முயன்றுள்ளார். இதில் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.