செந்துறை அருகே நக்கம்பாடி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா ஆர்வமுடன் கிராம மக்கள் மீன்களை பிடிக்கும் காட்சி.
24.07.2023, அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராம ஊராட்சியில் விவசாய பாசனத்திற்காக பெரிய ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் அந்த ஏரி நிரம்பியது. அதன்பிறகு விவசாயிகள் விவசாயத்திற்காக ஏரியிலிருந்து பாசன நீரை பயன்படுத்தினார். இதனால் ஏரியில் படிப்படியாக தண்ணீர் வற்ற தொடங்கியது. இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீன் பிடித் திருவிழா நடைப்பெறாத நிலையில் தற்போது இந்தாண்டு இந்த ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இதுதொடர்பாக சுற்றுப்புற கிராமங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து காலை முதல் நக்கம்பாடி பெரிய ஏரிக்கு நம்மங்குணம், சொக்கநாதபுரம், பெருமாண்டி, நல்லநாயகபுரம், வஞ்சனபுரம் மற்றும் செந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மோட்டார் சைக்கிள், கார்களில் வந்து குவிந்தனர்.
மேலும் நக்கம்பாடி ஏரியில் பூஜைகள் செய்யப்பட்டு, கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக் கொண்டு ஏரியில் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த கத்தா மற்றும் வலைகளை பயன்படுத்தி ஆர்வமுடன் கிராம மக்கள் மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெழுத்தி, பாறை, விறா, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். பிடிபட்ட மீன்கள், சுமார் 5 கிலோ வரை எடை கொண்டதாக இருந்தது. இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் ஆயிரம் கிலோ வரை மீன்கள் சிக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
அரியலூர் செய்தியாளர் D.வேல்முருகன்
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்