கடலுக்குள் விழுந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி அன்று விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களோடு, சமையல் பணிக்காக தேங்காய்ப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த அபுபக்கரின் மகன் ஜலாலுதீன் (வயது 38) சென்றிருந்தார். அவர் கடந்த 21-ந் தேதி காலை 5.30 மணியளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்துவிட்டார்.அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள ஜலாலுதீன் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.