ஏப்ரல் 12ந்தேதி,மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மதச் சார்பாற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை,
“பாஜகவினரை மகிழ்விக்க தினமும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆளுநர் கூறுவதா?”
தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர்.என்.இரவி அவர்களின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக – ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.
அதிலும் குறிப்பாக சனாதனத்துக்கும் வர்ணாசிரமதர்ம முறைகளுக்கும் ஆதரவாக அவர் பொதுமேடைகளில் எடுத்து வைத்த கருத்துக்கள் அபத்தமானவை.
திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக தினந்தோறும் தனது பாய்ச்சலைத் தொடர்ந்தார். திருக்குறளுக்கு தவறான பொருள் சொல்லி, திருக்குறளே தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டார். உலகப் பேராசான் கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் இந்தியாவைப் பிளவுபடுத்துவதாகப் பிதற்றினார். பிரிட்டிஷ் ஆட்சி குறித்து அவர் வைத்த கோபமான விமர்சனங்களைப் பார்த்தபோது, ‘இந்திய நாடு இப்போதும் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் உள்ளதோ’ என்ற சந்தேகம் ஏற்பட்டது பலருக்கு;
அண்ணல் அம்பேத்கரை பிளவுபடுத்தும் சக்தியாக ஆக்க காலனிய ஆட்சியாளர்கள் நினைத்தாகவும் இவர் தான் கண்டுபிடித்தார். இப்படி ஆளுநர் ரவி உதிர்த்த முத்துகள் அனைத்தும் சொத்தையான வாதங்கள். ஏதோ ஒரு கற்பனா உலகத்தைக் கட்டமைத்துக் கொண்டு அங்கு காற்றில் கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.
இவை அனைத்தும் தமிழ்நாட்டில் சமூகச் சலசலப்பையும், தேவையற்ற பதற்றங்களையும், சர்ச்சைகளையும் விதைக்கும் கருத்துக்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன. இவை அவரது பணிக்காக, பணிக்கப்பட்ட பணிகளும் அல்ல.
மாநிலங்களில் மரபு சார்ந்த ஒரு அதிகாரப் பதவியில் இருப்பவர் ஆளுநர்.
அமைச்சரவையின் முடிவுகளைச் செயல்படுத்துபவர். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குபவர். ஒப்புதல் வழங்க மறுத்து, மீண்டும் அதனை சட்டமன்றத்திற்கு அனுப்ப அவருக்கு அதிகாரம் உண்டு. சட்டமன்றம், மீண்டும் அந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். இவ்வாறு சட்டமன்றம் – மாநில அமைச்சரவை விருப்ப அதிகார எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியவரே ஆளுநர் ஆவார். இப்படித்தான் அரசியலமைப்புச் சட்டமும் சொல்கிறது. உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் சொல்கின்றன. இம்முறைப்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவதும் இல்லை. மாறாக மீறியும் செயல்பட்டு வருகிறார்.
மாநில அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையே ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் வாசிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை அப்படியே வாசிக்காமல் பல பகுதிகளை நீக்கியும் – சில பகுதிகளைச் சேர்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையே அவமதிக்கும் செயலாக அமைந்திருந்தது அது. பொதுவெளியில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளுநர் தள்ளப்பட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு இன்னமும் அனுமதி தராமல் தாமதித்து வைத்துள்ளார் ஆளுநர். அதிலும் குறிப்பாக 42 உயிர்களைப் பலிவாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசரச்சட்டத்துக்கு இன்னமும் அனுமதி தராமல் இருக்கிறார். ஆனால் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்களை அவர் வெளிப்படையாகச் சந்தித்தது பொதுவெளியில் பரவி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார் ஆளுநர்.
‘ஏன் இது போன்ற கோப்புகளை முடக்கி வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்டபோது அரசுக்கு உரிய எழுத்து மூலம் பதிலைத் தராத ஆளுநர் அவர்கள், மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப் பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பேசி இருக்கிறார் தமிழக ஆளுநர்.ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்ட ஆளுநர், தனது பிரமாண உறுதிமொழியை மீறி இப்படிப் பேசி இருப்பது அவரது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. சாதாரண ரவியாக இருந்தால், இதுபோன்ற அபத்தக் குரல்கள் பொருட்படுத்தத்தக்கது அல்ல. ஆளுநராக இருப்பதால் தான் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது.
அதே கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவதூறு கருத்தைச் சொல்லி இருக்கிறார் ஆளுநர். கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆகிய போராட்டங்கள் அந்நிய நாடுகளின் நிதியால் நடந்த போராட்டம் என்று சொல்வது தமிழ்நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்துவது ஆகும்.
இலட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்த மக்கள் போராட்டங்கள் இவை. இது அனைத்தையும் அந்நியச் சதி என்று திசை திருப்புவதன் உள்நோக்கம் என்ன?
இன்னும் சொன்னால், ‘ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து முதலில் போராட்டம் நடத்தியவன் நான்தான். உண்ணாவிரதம் நடத்தி தெருவில் கிடந்தேன். அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் டீல் பேசினார்கள். நான் தேர்தலில் நின்றபோது அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பணம் கொடுக்க வந்தார்கள்’ என்று பேட்டி கொடுத்தவர் பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள். இது ஆளுநருக்கு தெரியுமா?
13 உயிர்கள் துள்ளத் துடிக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த மக்களும் அந்நியச் சதிகாரர்கள் என்கிறாரா ஆளுநர்? கூட்டத்தைக் கலைப்பதற்காக மட்டுமில்லாமல், துரத்தித் துரத்திச் சுட்டது அதிமுக ஆட்சி. இதை எல்லாம் நியாயப்படுத்துகிறாரா ஆளுநர்?
ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும் –
ஸ்டெர்லைட் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் – அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று ஒரு ஆளுநர் நினைப்பாரே ஆனால் அத்தகைய ஆளுநர் எங்களுக்குத் தேவையில்லை என்பதே எங்களது இறுதியிலும் உறுதியான நிலைப்பாடு ஆகும்.ஆளுநர் பதவியே எந்த மாநிலத்துக்கும் அவசியமில்லாத பதவியாகும். தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்துவதற்கு பாஜக நினைத்து – அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வருகிற 12.4.2023 (புதன் கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை நமது போராட்டம் ஓயாது.
மக்களாட்சியின் மாண்பைக் காக்க நினைக்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று திரண்டு வாரீர் என வேண்டுகிறோம்.