“நம்ம சென்னை நம்ம சந்தை” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்!
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னை செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் தமிழ்நாட்டில் விளைகின்ற பாரம்பரிய நாட்டுக்காய்கறிகளை வாரந்தோறும் நடைபெறும் “நம்ம சென்னை நம்ம சந்தை”யை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் பொ.சங்கர், வேளாண்மைத் துறை ஆணையர் எல்.சுப்ரமணியன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தாதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் வயல்களில் இருந்து காய்கறிகளை நேரடியாக பெற்று அதனை சுவைக்க நம்ம சென்னை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளை 24 மணி நேரத்தில் விவசாயிகளின் வயல்களிலிருந்து பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வாரந்தோறும் சென்னை செம்மொழிப் பூங்காவில் இரண்டு நாட்கள் (வெள்ளி மற்றும் சனி காலை வேளைகளில் மட்டும்) பாரம்பரிய காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியன செம்மொழிப் பூங்காவில் உள்ள டான்ஹோடா விற்பனை மையத்தில் விற்பனை செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் துணிப்பை (மஞ்சப்பை) கொண்டுவந்து வாங்குவோருக்கு 5% சலுகை வழங்கப்படும்.
பாரம்பரிய காய்கறிகளின் பட்டியல்:-
கறிவேப்பிலை செங்காம்பு, வெள்ளை பாகல் (கோவை)
பழு பாகல், மஞ்சள் பூசணி, சக்கரைவள்ளி கிழங்கு (இளஞ்சிவப்பு நிறம் (திண்டுக்கல்)
மலைப்பூண்டு (கொடைக்கானல்)
காந்தாரி மிளகாய் (கன்னியாகுமரி)
எறையூர் சேப்பங்கிழங்கு, உளுந்தூர்பேட்டை கருணை கிழங்கு (கள்ளக்குறிச்சி)
கண்ணாடி கத்தரி (நாமக்கல்)
ஊர் அவரை (சேலம்)
புளியங்குடி எலுமிச்சை, பாவூர்சத்திரம் வெண்டை, வெள்ளைக்கத்தரி (தென்காசி)
சிறுகிழங்கு (திருநெல்வேலி)
இலவம்பாடி முள் கத்தரி (வேலூர்)
கோவைக்காய் (விழுப்புரம்)
அதலக்காய், சாத்தூர் வெள்ளரி (விருதுநகர்)
மூக்குத்தி அவரை, சிறகு அவரை, பூனைக்காலி அவரை (திருப்பூர்)
இதர காய்கறிகளின் பட்டியல்:
கீரைகள் (வெந்தயகீரை, சிறுகீரை, அரைகீரை, பருப்பு, கீரை, பாலக்கீரை, மணத்தக்காளி கீரை) வேலூர் மாவட்டத்திலிருந்து
கறிபலா (கன்னியாகுமரி)
கிருஷ்ணகிரியில் இருந்து கொடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை)
சின்ன வெங்காயம் (பெரம்பலூர்)
புரோக்கோலி (பச்சைப் பூக்கோசு), சிவப்பு முட்டை க்கோசு, பேபி உருளைக்கிழங்கு, முள்ளங்கி (நீலகிரி)
ராணிப்பேட்டையிலிருந்து வாழைக்காய்
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பட்டியல்:
பனங்கற்கண்டு (தூத்துக்குடி)
பனங்கிழங்கு (ராமநாதபுரம்)
மஞ்சள் கொத்துகள் (ஈரோடு)
தேங்காய் பூ (தருமபுரி)