ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் தனியார் மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 113 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.மேலும் இம்முகாமில், வருவாய்த் துறையின் சார்பில் 73 பயனாளிக்கு ரூ.7.53 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, இணைய வழி பட்டா மாற்றம், நத்தம் பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியத் தொகையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இணைய வழி வீட்டுமனை பட்டாக்களும், விலையில்லா சலவைப் பெட்டியும், வேளாண் இடுபொருட்களும், தோட்டக்கலை இடுபொருட்களும், வேளாண் கருவிகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு பயிர் கடன்களும், சுய தொழில் கடன்களும், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மருந்து பெட்டகங்களும் என ஆக மொத்தம் 172 பயனாளிகளுக்கு ரூ.56,52,245 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இம்முகாமில், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மகளிர் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், அஞ்சலகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
முன்னதாக, வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் கிராமப் பட்டாக்களை 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம் செய்த சிலம்பூர் (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் திரு.மு.மாரிமுத்து, கிராம உதவியாளர் திரு.மா.தாமரைச்செல்வனுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இம்முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர்த்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இம்முகாமில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வேளாண் இணை இயக்குநர் பழனிச்சாமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் சா.பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றியக்குழுத் தலைவர் மருதமுத்து, வட்டாட்சியர் இளவரசன், ஊராட்சி மன்றத் தலைவர் வீ.மணிசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.